< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
இன்று தொடங்குகிறது ஜனநாயக திருவிழா: எந்தெந்த மாநிலங்கள்..? எத்தனை தொகுதிகளில் வாக்குப்பதிவு..? - முழு விபரம்

Image Courtacy: ANI

நாடாளுமன்ற தேர்தல்-2024

இன்று தொடங்குகிறது ஜனநாயக திருவிழா: எந்தெந்த மாநிலங்கள்..? எத்தனை தொகுதிகளில் வாக்குப்பதிவு..? - முழு விபரம்

தினத்தந்தி
|
19 April 2024 1:12 AM IST

நாடு முழுவதும் 21 மாநிலங்களில் நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தல் இன்று நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்ற (மக்களவை) தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசு தேர்வு செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் பதவிக்காலம் விரைவில் முடிவுக்கு வருகிறது.

எனவே புதிய அரசை தேர்வு செய்வதற்காக கடந்த மாதம் 16-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 19-ந்தேதி (இன்று) முதல் ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது.

இதனைத்தொடர்ந்து தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் என பாரபட்சம் இன்றி அனைத்துக்கட்சிகளும் போட்டியில் குதித்து உள்ளன. கடந்த 2004-ம் ஆண்டு முதல் இந்திய பிரதமராக இருந்து வரும் மோடியும், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினரும் ஹாட்ரிக் வாய்ப்புக்காக நாடு முழுவதும் தேர்தல் பணிகளை சிறப்பாக செய்து வருகின்றனர்.

மறுபுறம் மத்தியில் ஆட்சி மாற்றத்தை உறுதி செய்வதற்காக காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் 'இந்தியா' என்ற பெயரில் கூட்டணியை அமைத்து தீவிர களப்பணியாற்றி வருகின்றன. இதனால் இந்திய நாடாளுமன்ற தேர்தல் களம் இந்த இரு பிரதான அணிகளுக்கு எதிரான போட்டியாக உருவெடுத்து இருக்கிறது.

கூட்டணிப்பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு, அணி மாற்றம், கட்சித்தாவல், தேர்தல் அறிக்கை, பறக்கும் படையினர் சோதனை, தலைவர்களின் பிரசாரம் என கடந்த ஒரு மாதமாக இந்தியா முழுவதும் தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது.

இந்த மாபெரும் அரசியல் போரின் முதல் சுற்று இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. அந்தவகையில் 7 கட்ட தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது.

தமிழ்நாடு (39),

அருணாசல பிரதேசம் (2),

அசாம் (5),

பீகார் (4),

சத்தீஷ்கார் (1),

மத்திய பிரதேசம் (6),

மராட்டியம் (5),

மணிப்பூர் (2),

மேகாலயா (2),

மிசோரம் (1),

நாகாலாந்து (1),

ராஜஸ்தான் (12),

சிக்கிம் (1),

திரிபுரா (1),

உத்தரபிரதேசம் (8),

உத்தரகாண்ட் (5),

மேற்கு வங்காளம் (3),

அந்தமான்-நிகோபார் (1),

காஷ்மீர் (1),

லட்சத்தீவு (1),

புதுச்சேரி (1)

என 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 102 தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது.

7 மணிக்கு தொடங்குகிறது

இன்று வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் கடந்த ஒரு மாதமாக கொளுத்தும் வெயிலுக்கு மத்தியிலும் தேர்தல் பிரசாரம் அனல் பறந்தது. தேசிய மற்றும் மாநில கட்சிகளின் தலைவர்கள் சூறாவளியாக சுழன்று வாக்கு சேகரித்தனர். ஒரு மாதமாக அனல் பறந்த தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் ஓய்ந்தது. அத்துடன் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகளும் மேற்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து இந்த 102 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. அருணாசலபிரதேசம் போன்ற சில மாநிலங்களில் 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிக்கப்படும்.

முன்னாள் கவர்னர், முன்னாள் முதல்-மந்திரிகள், மத்திய மந்திரிகள்

7 கட்ட தேர்தலும் நிறைவடைந்த பின் ஜூன் 4-ந்தேதி இந்த வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. இன்றைய தேர்தலில் முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், 3 முன்னாள் முதல்-மந்திரிகள், நிதின் கட்காரி, கிரண் ரிஜிஜூ உள்பட 8 மத்திய மந்திரிகள், காங்கிரசின் கார்த்தி சிதம்பரம், நகுல் நாத், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை உள்பட பல்வேறு முக்கிய வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது.

அருணாசல பிரதேசம்

நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவுடன் அருணாசல பிரதேசம், சிக்கிம் மாநில சட்டசபைகளுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது. அருணாசல பிரதேசத்தில் மொத்தம் 60 தொகுதிகள் உள்ளன. இதில் முதல்-மந்திரி பெமா காண்டு உள்பட 10 பா.ஜனதா வேட்பாளர்கள் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். எனவே மீதமுள்ள 50 தொகுதிகளில் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தொகுதிகளில் களமிறங்கி இருக்கும் 133 வேட்பாளர்களின் எதிர்காலத்தை 8.92 லட்சம் வாக்காளர்கள் நிர்ணயிக்கிறார்கள். இதற்காக 2,226 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

சிக்கிம்

இதைப்போல சிக்கிம் மாநில சட்டசபைக்கும் இன்று தேர்தல் நடக்கிறது. மொத்தமுள்ள 32 தொகுதிகளில் 146 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆளும் சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா மற்றும் எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி ஆகியவை அனைத்து தொகுதிகளிலும் களமிறங்கி உள்ளன. அதேநேரம் பா.ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் போட்டிக்களத்தில் உள்ளன. முதல்-மந்திரியும், ஆளும் சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சாவின் தலைவருமான பிறேம் சிங் தமாங் மற்றும் சிக்கிம் ஜனநாயக முன்னணி தலைவர் பவன்குமார் சாம்லிங் ஆகியோர் முக்கியமான வேட்பாளர்கள் ஆவர்.

பலத்த பாதுகாப்பு

32 சட்டசபை தொகுதிகள் மற்றும் ஒரேயொரு நாடாளுமன்ற தொகுதியில் நடைபெறும் தேர்தலில் வாக்களிக்க தகுதிவாய்ந்த வாக்காளர் எண்ணிக்கை 4.64 லட்சம் ஆகும். இவர்கள் வாக்களிப்பதற்காக 573 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இன்று நடைபெறும் நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தல் மற்றும் 2 மாநில சட்டசபை தேர்தலுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அந்தந்த மாநில போலீசாருடன் இணைந்து துணை ராணுவப்படையினரும் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்