< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
சென்னையில் ஓட்டுப்போடாத 21 லட்சம் வாக்காளர்கள் - ராதாகிருஷ்ணன் தகவல்

கோப்புப்படம்

நாடாளுமன்ற தேர்தல்-2024

சென்னையில் ஓட்டுப்போடாத 21 லட்சம் வாக்காளர்கள் - ராதாகிருஷ்ணன் தகவல்

தினத்தந்தி
|
21 April 2024 3:16 AM IST

சென்னை மாவட்டத்தில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகளில் 21 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுப்போடவில்லை என மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னை,

சென்னையில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு முடிந்து வாக்கு எந்திரங்கள் அந்தந்த பாதுகாப்பு அறைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் இருந்து வரப்பெற்ற மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், சென்னை லயோலா கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைத்து 'சீல்' வைக்கப்பட்டது.

இந்த பணி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி கமிஷனருமான டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், தேர்தல் பொது பார்வையாளர் சுரேஷ், மத்திய சென்னை தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன்குமார் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராதாகிருஷ்ணன், "நாடாளுமன்ற தேர்தல் அமைதியாகவும், சிறப்பான முறையிலும் நடந்து முடிந்தது. சென்னை மாவட்டத்தில் 3 நாடாளுமன்ற தொகுதிகளில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் 39.25 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வடசென்னையில் திருவொற்றியூர், தென்சென்னையில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியைச் சேர்த்து 48.69 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வடசென்னையில் 60.13 சதவீதம் வாக்குப்பதிவு, தென்சென்னையில் 54.27 சதவீதம் வாக்குப்பதிவு, மத்திய சென்னையில் 53.91 சதவீதம் வாக்குப்பதிவு என மொத்தம் 56.10 சதவீதம் வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.

3 நாடாளுமன்ற தொகுதிகளையும் சேர்த்து 27 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். சென்னையில் 21 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை. சென்னையில் அதிகபட்சமாக ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் 66.75 சதவீதமும், குறைந்தபட்சமாக ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் 52.04 சதவீதமும் பதிவாகியுள்ளது.

மாநில தேர்தல் ஆணையம் கொடுத்த தகவலில் வாக்குப்பதிவு கூடுதலாக இருந்தது. தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வாக்களித்தவர்களின் எண்ணிக்கையை கூடுதலாக தெரிவிப்பார்கள். சில வாக்குச்சாவடி அலுவலர்களின் கருத்தின் அடிப்படையிலான தகவலில் சற்று வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. தற்போது கொடுத்துள்ள சென்னை மாவட்ட வாக்குப்பதிவு ழுழு விவரத்தில் எந்த மாற்றமும் இருக்காது.

இடமாறுதல், நகர்ப்புறங்களில் மக்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டாதது, மதியம் வேளையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வாக்குப்பதிவு செய்ய மக்கள் ஆர்வம் காட்டவில்லை. இதுபோன்ற காரணங்களால் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்துள்ளது. 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை ஒப்பிடும்போது சென்னையில் அனைத்து இடங்களிலும் 4 சதவீதம் வாக்குப்பதிவு குறைந்துள்ளது.

இடமாற்றம், இறப்பு உள்ளிட்ட காரணங்களால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் நடைபெற்றிருக்கும். இதேபோல, ஒருசில வாக்காளர்களின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து அந்த சமயத்தில் இருந்த அதிகாரியிடம் உரிய விளக்கம் கேட்கப்படும். தொகுதி மாறி குடிபெயரும்போது அதிகாரிகள் நேரடியாக சென்று பார்க்கும்போது ஆட்கள் இல்லையென்றால் பட்டியலில் இருந்து நீக்கம் செய்து விடுவார்கள்" என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்