2024 மக்களவை தேர்தல்; முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் எண்ணிக்கை 280
|நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களில் ஒருவர் மக்களவையில் 7 முறை எம்.பி.யாக பதவி வகித்தவர் ஆவார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில், ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி என இரு பெரும் தேசிய கட்சிகள் எதிரெதிராக களம் கண்டன.
இதனை தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை கடந்த 4-ந்தேதி நடந்தது. இதில், பா.ஜ.க. 240 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எனினும், தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது.
பா.ஜ.க. அதிக தொகுதிகளை கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக உள்ளது. காங்கிரஸ் கட்சி 99 தொகுதிகளை கைப்பற்றி 2-வது பெரிய கட்சியாகவும், 37 தொகுதிகளை கைப்பற்றி சமாஜ்வாடி கட்சி 3-வது பெரிய கட்சியாகவும் உள்ளன.
சமீபத்தில் நடந்து முடிந்த 18-வது மக்களவை தேர்தலில், 280 எம்.பி.க்கள் முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் 267 எம்.பி.க்கள் முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தனர். இந்த தேர்தலில் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் மொத்தம் 263 எம்.பி.க்கள், இதற்கு முன் எம்.பி.க்களாக பதவி வகித்தவர்கள்.
ஒருவர் மக்களவையில் 7 முறை எம்.பி.யாக பதவி வகித்தவர். தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களில் 8 பேர் அவர்களுடைய தொகுதியை மாற்றி கொண்டனர். ஒருவர் 2 தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
இந்த தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 9 எம்.பி.க்கள் 17-வது மக்களவை தேர்தலின்போது, வேறு கட்சியில் இருந்தவர்கள். மற்ற 8 பேர், இதற்கு முன் இருந்த கட்சியில் இருந்து பிரிந்து வந்த கட்சியை சேர்ந்தவர்கள். தேர்தலில் போட்டியிட்ட 53 மந்திரிகளில் 35 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.