2024 தேர்தலில் இந்தியாவிற்கே விடியலைத்தர வேண்டும் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
|இந்த தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளையும் வென்று கலைஞரின் பிறந்த நாளுக்கு பரிசாக கொடுப்போம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
விழுப்புரம்,
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் துரை.ரவிக்குமாரை ஆதரித்து தேர்தல் பிரசார கூட்டம் விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு துரை.ரவிக்குமாரை ஆதரித்து பானை சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
பா.ஜனதா கூட்டணியில் உள்ள சின்ன, சின்ன கட்சிகளுக்கு அவர்கள் கேட்கும் சின்னத்தை உடனே ஒதுக்கி விடுகிறார்கள். ஆனால் நம்முடைய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகள் சின்னத்தை பெற சட்ட போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது. திருமாவளவனும், ரவிக்குமாரும் சட்டப்போராட்டம் நடத்தி இன்றைக்கு பானை சின்னத்தை வெற்றிகரமாக வாங்கியிருக்கிறோம் என்று சொன்னால் அதிலே நம்முடைய தேர்தல் வெற்றி, பாதி வெற்றி உறுதியாகிவிட்டது. இன்னொரு பாதி வெற்றி உங்கள் கையில் இருக்கிறது.
சென்ற முறை நாடாளுமன்ற தேர்தலில் 'கோ பேக் மோடி' என்றோம், இந்த முறை 'கெட் அவுட் மோடி' என்று சொல்ல வேண்டும். கடந்த முறை நம்முடைய எதிரிகள் எல்லாம் சேர்ந்து ஒன்றாக வந்தார்கள். ஆனால் இந்த முறை அணி, அணியாக பிரிந்து வந்திருக்கிறார்கள்.
ரவிக்குமாரை குறைந்தது 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்து எதிர்த்து நிற்பவர்களை டெபாசிட் காலி செய்ய வேண்டும். அப்படி செய்தால் நான் மாதம் இருமுறை, விழுப்புரத்திற்கு வருகை தந்து உங்களின் அனைத்து தேவைகளையும் முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று அனைத்து பணிகளையும் பூர்த்தி செய்யும் பணியில் ஈடுபடுவேன் என்று வாக்குறுதி அளிக்கிறேன். கலைஞர் வழியில் வந்த நம்முடைய தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்வதை தான் செய்வார், செய்வதையே சொல்வார். வாக்குறுதிகள் அனைத்தையும் தலைவர் ஸ்டாலின் நிச்சயமாக நிறைவேற்றித்தருவார்.
முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்களையெல்லாம் பா.ஜனதா பயமுறுத்தி வைத்திருந்தது தெரியுமா? எல்லோரின் மீதும் ஈடி, சி.பி.ஐ. மூலம் பயமுறுத்தி அடிமைகளாக வைத்திருந்தார்கள். தமிழ்நாட்டின் உரிமைகளை எல்லாம் பறித்ததும் அப்படித்தான். அ.தி.மு.க. அடிமைகள் போன்று தி.மு.க. அமைச்சர்களும் இருப்பார்கள் என்று பொய் கணக்கு போடுகிறார்கள். நாங்கள் மோடிக்கும் பயப்பட மாட்டோம், ஈடிக்கும் பயப்பட மாட்டோம், மோடியின் டாடிக்கும் பயப்பட மாட்டோம். எதுவாக இருந்தாலும் சட்டரீதியாக சந்திப்போம்.
மோடி சொல்கிறார், தி.மு.க. தலைவருக்கு தூக்கம் போச்சு, தி.மு.க.காரர்களுக்கு தூக்கம் போச்சு, ஆமாம் எங்களுக்கு தூக்கம் போச்சு. உங்களை வீட்டுக்கு அனுப்பும் வரை எங்களுக்கு தூக்கம் இல்லை. இத்தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளையும் வென்று கலைஞரின் பிறந்த நாளுக்கு பரிசாக கொடுப்போம். 2021 தேர்தலில் நாம் அடிமைகளை எப்படி விரட்டியடித்தோமோ, அதுபோல் 2024 தேர்தலில் அடிமைகளின் எஜமானர்களையும் விரட்டியடித்து இந்தியாவிற்கே விடியலைத்தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.