இடைத்தேர்தல் எதிரொலி: 2 வாக்குகளை செலுத்தும் விளவங்கோடு வாக்காளர்கள்
|இடைத்தேர்தல் எதிரொலியாக விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள் 2 வாக்குகளை செலுத்த உள்ளனர்.
நாகர்கோவில்,
கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை பொதுத்தேர்தலில் விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ.வாக விஜயதரணி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்றவர் என்ற பெருமையைப் பெற்றவர். காங்கிரஸ் கட்சிக்கும், இவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயதரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பா.ஜனதாவில் சேர்ந்தார். மேலும் அவர் தனது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார்.
இதனால் தற்போது நாடு முழுவதும் நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலோடு, விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலும் நடைபெறும் என தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகம்- புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுடன், விளவங்கோடு தொகுதிக்கும் ஒரே கட்டமாக நாளை தேர்தல் நடைபெற இருக்கிறது.
விளவங்கோடு சட்டமன்ற இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் தாரகை கத்பர்ட், பா.ஜனதா சார்பில் நந்தினி, அ.தி.மு.க. சார்பில் ராணி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெமினி மற்றும் 6 சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 10 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இந்த தொகுதியில் 4 முனைப் போட்டி நிலவினாலும் காங்கிரஸ்- பா.ஜனதாவுக்கு இடையேதான் நேரடி போட்டி இருந்து வருகிறது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கும், சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் சேர்த்து மொத்தம் 272 வாக்குச்சாவடிகள் இந்த தொகுதியில் அமைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்துக்கு தனியாகவும், சட்டமன்றத்துக்கு தனியாகவும் வாக்குப்பதிவு செய்யப்பட உள்ளது. இதனால் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் இடம் பெற்றுள்ள 2 லட்சத்து 37 ஆயிரத்து 741 வாக்காளர்கள் நாடாளுமன்றத்துக்கு ஒரு வாக்கையும், சட்டமன்றத்துக்கு ஒரு வாக்கையும் என ஒவ்வொரு வாக்காளரும் 2 வாக்குகளை செலுத்த உள்ளனர்.
கன்னியாகுமரி நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 22 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் 2 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் தேர்தல் ஆணையத்துக்கு ஏற்பட்டுள்ளது. விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு ஒரு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. இதனால் இந்த தொகுதிக்கு 272 வாக்குச்சாவடிகளில் மட்டும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு 2 வாக்குப்பதிவு எந்திரங்களும், சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு வாக்குப்பதிவு எந்திரம் என மொத்தம் 3 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.