தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசிக்க 8-ந்தேதி காங்கிரஸ் செயற்குழு கூட்டம்
|தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசிப்பதற்காக டெல்லியில் வரும் 8-ந்தேதி காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 4-ந்தேதி எண்ணப்பட்டன. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களிலும், 'இந்தியா' கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதே சமயம் பா.ஜ.க. தனியாக 240 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உள்ளது. காங்கிரஸ் கட்சி 99 இடங்களை கைப்பற்றி 2-வது பெரிய கட்சியாகவும், சமாஜ்வாடி கட்சி 37 தொகுதிகளை கைப்பற்றி 3-வது பெரிய கட்சியாகவும் உள்ளன.
இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசிப்பதற்காக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் வரும் 8-ந்தேதி காலை 11 மணிக்கு காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெறும் இந்த செயற்குழு கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
காங்கிரஸ் கட்சி கடந்த 2019-ம் ஆண்டில் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த நிலையில், இந்த முறை அக்கட்சியின் வெற்றி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 2014 மற்றும் 2019 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி 10 சதவீதத்திற்கும் குறைவான எம்.பி.க்களை பெற்றிருந்ததால் மக்களவையில் எதிர்கட்சி அந்தஸ்தை இழந்திருந்தது. இந்நிலையில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மக்களவையில் காங்கிரஸ் கட்சி மீண்டும் எதிர்கட்சி அந்தஸ்தை பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.