< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
Criminal Cases against new MPs

Image Courtesy : PTI

நாடாளுமன்ற தேர்தல்-2024

மக்களவைக்கு தேர்வான புதிய எம்.பி.க்களில் 251 பேர் மீது கிரிமினல் வழக்குகள்; 27 பேர் தண்டனை பெற்றுள்ளனர்

தினத்தந்தி
|
6 Jun 2024 3:51 PM IST

மக்களவைக்கு தேர்வான புதிய எம்.பி.க்களில் 251 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 543 மக்களவை உறுப்பினர்களில் 251 (46 சதவீதம்) பேர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 27 பேர் தண்டனை பெற்றுள்ளனர் என்றும் தேர்தல் உரிமைகள் அமைப்பான ஜனநாயக சீர்திருத்த சங்கம் நடத்திய பகுப்பாய்வில் தெரியவந்துள்ளது. கிரிமினல் வழக்குகளை எதிர்கொள்ளும் வேட்பாளர்கள் அதிக எண்ணிக்கையில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

கடந்த 2019 மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற 233 (43 சதவீதம்) எம்.பி.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருந்தன. அதே போல் 2014-ம் ஆண்டில் 185 (34 சதவீதம்) பேர், 2009-ம் ஆண்டில் 162 (30 சதவீதம்) பேர் மற்றும் 2004-ம் ஆண்டில் 125 (23 சதவீதம்) பேர் மீது கிரிமினல் வழக்குகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2009-ம் ஆண்டை ஒப்பிடுகையில் தற்போது கிரிமினல் வழக்குகளை கொண்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை 55 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது மக்களவைக்கு தேர்வாகி இருக்கும் கிரிமினல் வழக்குகளை கொண்ட 251 எம்.பி.க்களில், 170 (31 சதவீதம்) பேர் மீது பாலியல் வன்கொடுமை, கொலை, கொலை முயற்சி, கடத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட கடுமையான குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2009-ம் ஆண்டை ஒப்பிடுகையில் இதுபோன்ற கடுமையான குற்றவழக்குகளை எதிர்கொள்ளும் எம்.பி.க்களின் எண்ணிக்கை தற்போது 124 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதே சமயம் வெற்றி பெற்றுள்ள புதிய எம்.பி.க்களில் 27 பேர் கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்றுள்ளனர். இதில் கொலை, கடத்தல், கொலை முயற்சி, பாலியல் வன்கொடுமை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் வெறுப்பு பேச்சு உள்ளிட்ட வழக்குகளில் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

2024 மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற 240 பா.ஜ.க. வேட்பாளர்களில் 94 பேர் (39 சதவீதம்) பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. அதே போல், வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்கள் 99 பேரில் 49 (49 சதவீதம்) பேர் மீதும், வெற்றி பெற்ற சமாஜ்வாடி வேட்பாளர்கள் 37 பேரில் 21 (45 சதவீதம்) பேர் மீதும், வெற்றி பெற்ற திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் 29 பேரில் 13 (45 சதவீதம்) பேர் மீதும், வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர்கள் 22 பேரில் 13 (59 சதவீதம்) பேர் மீதும் கிரிமினல் வழக்குகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்