ஓ.டி.டி.யில் வெளியான 'சீதா ராமம்' பட நடிகரின் 'அஹம் ரீபூட்'
|'சீதா ராமம்' பட நடிகர் சுமந்த் நடித்த திரில்லர் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது.
சென்னை,
மறைந்த பழம்பெரும் நடிகர் அக்கினேனி நாகேஸ்வர ராவின் பேரன் சுமந்த். இவர் முன்னதாக துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்பெற்ற 'சீதா ராமம்' படத்தில் நடித்துள்ளார். தற்போது இவர் 'அஹம் ரீபூட்' என்ற திரில்லர் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு புதுமுக இயக்குனர் பிரசாந்த் சாகர் அட்லூரி கதை எழுதி இயக்கியுள்ளார்.
மேலும், ஸ்ரீராம் மதுரி இசையமைக்கும் இப்படத்திற்கு வருண் அங்கர்லா ஒளிப்பதிவு செய்துள்ளார். வாயுபுத்ரா என்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் எஸ் ஒரிஜினல்சின் கீழ் ரகுவீர் கோரிபார்த்தி மற்றும் ஸ்ருஜன் யாரபோலு இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளனர்.
திரில்லர் படமான 'அஹம் ரீபூட்' திரையரங்குகளில் வெளியிடப்படவில்லை. இது நேரடியாக 'ஆஹா' என்ற ஓடிடி தளத்தில் கடந்த 1-ம் தேதி வெளியாகியுள்ளது. இந்தப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. போதைப்பொருள் கடத்தல்காரன் என்று குற்றம் சாட்டப்பட்ட ஒரு கதாநாயகனைச் சுற்றி நடக்கும் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படமாக இருக்கிறது.