திருச்செந்தூர் கோவிலில் 15 ஆண்டுகளுக்கு பின் கீழே கொண்டுவரப்பட்ட கலசங்கள்... தன்மை மாறாமல் இருந்த வரகு
|திருச்செந்தூர் கோவிலின் ராஜகோபுரத்தில் உள்ள 9 கலசங்களை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
திருச்செந்தூர்,
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஹெச்.சி.எல்., நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி மதிப்பில் பெருந்திட்ட வளாக பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் அறநிலையத்துறை சார்பில் ரூ.100 கோடி மதிப்பில் மகா கும்பாபிஷேக திருப்பணிகளும் நடந்து வருகிறது. இதற்காக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ராஜகோபுர திருப்பணிக்கான பாலாலயம் நடந்தது. இதையடுத்து 137 அடி உயரமும், 9 நிலைகளை கொண்ட ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் ராஜ கோபுரத்தில் கீழ்த்தள பகுதிகள், தூண்கள் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் கோவில் இணை ஆணையர் கார்த்திக் நேரடி மேற்பார்வையில் ராஜகோபுரத்தில் உள்ள 9 கோபுர கலசங்களை புதுப்பிப்பதற்காகவும், கோபுரக் கலசங்களில் உள்ள பழைய நவதானியங்களை மாற்றுவதற்காகவும் ஆகம விதிப்படி பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் கோபுரத்திலிருந்த கலசங்கள் கழற்றி கீழே கொண்டு வரப்பட்டது. அப்போது கோபுர கலசத்துக்குள் இருந்த வரகை (வரகு) எடுத்து பார்க்கும் போது 15 ஆண்டுகள் ஆகியும், அதன் தன்மை மாறாமல் அப்படியே இருந்ததைக் கண்டு அறநிலையத்துறை அதிகாரிகள் ஆச்சரியம் அடைந்தனர். இதற்கு முன்பு திருச்செந்தூர் கோவிலில் கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை 2-ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.