< Back
ஆன்மிகம்
Lord Shivas Five Tandavams chidambaram natarajar temple
ஆன்மிகம்

சிவ பெருமானின் ஐந்தொழில் தாண்டவங்கள்

தினத்தந்தி
|
9 July 2024 4:05 PM IST

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களையும், சிவ பெருமான் ஒருசேர செய்யும் இடமாக சிதம்பரம் நடராஜர் ஆலயம் திகழ்கிறது.

பொதுவாக ஆனி உத்திரம் என்றதும் நம் நினைவிற்கு வருவது நடராஜரின் ஆனந்த தாண்டவம்தான். உயிர்கள் அனைத்தும் குற்றங்கள் நீங்கி, தூய்மை அடைவதற்காகவும், பேரின்பம் பெறுவதற்காகவும், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளுதல் ஆகிய 5 செயல்களையும், இறைவன் இடைவிடாமல் செய்து கொண்டிருக்கிறார். இறைவன் நிகழ்த்தும் இந்த 5 செயல்களையும் 'தாண்டவம்' என்றும், 'நடனம்' என்றும், 'கூத்து' என்றும் கூறுவர். ஆடல் வல்லாளான சிபபெருமான், வான்வெளியில் நடத்தும் இந்தக் கூத்துக்களை, நமது கண்களால் காணமுடியாது. இறைவனின் இந்தக் கூத்துக்களை மக்களும் கண்டு உணரும் வகையில், தத்துவம் அறிந்து அறிஞர்களால் உருவாக்கப்பட்டது நடராஜர் திரு உருவம்.

ஆனந்த தாண்டவம்

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களையும், சிவ பெருமான் ஒருசேர செய்யும் இடமாக சிதம்பரம் நடராஜர் ஆலயம் திகழ்கிறது. இந்த நடனக்கோலத்தில் இறைவன் சிதம்பரம் நடராஜர் கோயிலில் காட்சிதருகிறார். இங்கு நடைபெறும் தாண்டவத்தை 'ஆனந்த தாண்டவம்' என்கிறார்கள். நடராஜர் தனது வலது மேல் கரத்தில் உள்ள உடுக்கையினால் படைத்தலையும், கீழுள்ள வலது கரமான அபயத்தினால் காத்தலையும், இடது மேல் கரத்தில் உள்ள அக்னியினால் அழித்தலையும், ஊன்றிய காலினால் மறைத்தலையும், தூக்கிய திருவடியால் அருளலையும் செய்து உயிர்களின் துன்பங்களை ஆனந்தத்தினை அருள்கிறார்.

படைத்தல்

தாம் செய்த நல்ல செயல்கள் மற்றும் தீய செயல்களுக்கு தகுந்தபடி, அந்த பயன்களை அனுபவிப்பதற்காக உயிர்களுக்கு தனு (உடல்), கரணம் (பொறிகள்), புவனம் (அனுபவிப்பது). போகங்களை (இன்ப, துன்பங்கள்) படைத்து அளிக்கிறார் ஈசன். அதாவது உடம்பையும், புலன்களையும், வாழ வேண்டிய இடத்தையும், வாழ்க்கைக்கு வேண்டிய பொருட்களையும் படைத்துக் கொடுக்கிறார். படைத்தல் தொழிலுக்குரிய தாண்டவம், 'காளிகா தாண்டவம்'. திருநெல்வேலி தாமிர சபையில் இந்த காளிகா தாண்டவம் நடைபெறுகிறது.

காத்தல்

ஆன்மா செய்த வினைப் பயன்களை அனுபவிப்பதற்காக இறைவனால் உண்டாக்கிக் கொடுக்கப்பட்ட உடலை, புலன்கள், உலகம், போகப் பொருட்கள் ஆகியவற்றை ஆன்மா அனுபவிக்க வேண்டிய காலம் வரையில் நிலை நிறுத்தி வைக்கும் செயல்தான் காத்தல். இறைவனின் காத்தல் தொழிலைக் குறிப்பது 'காத்தல் தாண்டவம்' இந்தத் தாண்டவத்தை 'கவுரி தாண்டவம்', 'லட்சுமி தாண்டவம்', 'சந்தியா தாண்டவம்', 'ரஷா தாண்டவம்' என்றும் அழைக்கிறார்கள். மாலை நேரத்தில் ஆடுவதால் 'சந்தியா தாண்டவம்' என்றும், பிரதோஷத்தன்று ஆடுவதால் 'பிரதோஷ நடனம்' என்றும் இதற்குப் பெயர். பஞ்ச சபைகளில் மதுரை திருத்தலத்தில் இந்த தாண்டவம் நிகழ்வதாக கூறப்படுகிறது.

அழித்தல்

உயிர்களை இளைப்பாறுதல் பொருட்டு, அழித்தல் நாண்டவம் நடக்கிறது. இருண்ட நள்ளிரவில் சுடுகாடுகளில் இந்நடனம் ஆடப்படுவதாக கூறப்படுகிறது. இதனை 'சம்ஹார தாண்டவம்' என்பார்கள். திருக்கடவூரில் இந்த தாண்டவம் நிகழ்கிறது.

மறைத்தல்

படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய செயல்களினால் உயிர்கள் பிறந்து, வாழ்ந்து, இறந்து செயல்படுகின்றன. இவ்வாறு பலமுறை பிறவி எடுத்து இறப்பதனால், உயிர்கள் 'ஏன் இந்தப் பிறவி?' என்று சலிப்படையலாம். அவ்வாறு சலிப்படையாமல் பிறவி எடுப்பதில், மேலும் விருப்பம் கொள்ளும்படி செய்தலே 'மறைத்தல்' ஆகும்.

இவ்வாறு உலக விஷயங்களில் மென்மேலும் உயிர்கள் விருப்பம் கொள்வதினால், புதிய வினைகளைச் செய்து அந்த வினைகளுக்கு ஏற்ப பல பிறவிகளில் பிறந்து, வாழ்ந்து, இறந்து உழல்கின்றது. இவ்வாறு பிறந்து, இறந்து உழல்வதினால் உயிர்களின் மீது படிந்துள்ள மாசானது செயல்படுகிறது. மாசு செயல்படுவதினால் ஆற்றல் குறைகிறது. மாசின் ஆற்றல் குறையக் குறைய உயிர்கள் தூய்மையடைகிறது. உயிர்கள் பிறவிகளில் கொள்ளும் வினைச் செயல்களிளால் அதன் ஆற்றலைக் குறைத்து செயலற்றுக் கிடக்கக் செய்யலாம். இப்படி உயிர்களிடத்தில் படிந்துள்ள மாசுகளைச் செயலற்றுக் கிடக்கச் செய்வதற்காகவே 'திரோபவம்' என்னும் மறைத்தல் செயலை இறைவன் மேற்கொள்கிறார். மறைத்தல் செயலை நிகழ்த்துவதற்குரிய திரிபுர தாண்டவம், குற்றாலத்தில் உள்ள சித்திர சபையில் நடைபெறுகிறது.

அருளல்

உயிர்களில் படிந்து, அவற்றை மங்கச் செய்து கொண்டிருக்கும் குற்றங்களை நீக்கி, உயிர்களை தூய தன்மையுள்ளதாக மாற்றி இறைவன் தமது திருவடியில் கூட்டிக்கொள்வது அருளல் செயலாகும். இது தொடர்பானது, திருவாலங்காட்டில் நடைபெறும் 'ஊர்த்துவ தாண்டவம்' ஆகும்.

செய்திகளை உடனுக்குடன் எக்ஸ் தளத்தில் அறிந்துகொள்ள.. https://x.com/dinathanthi

மேலும் செய்திகள்