திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
|ஆடி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் 4 மணி நேரத்துக்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் அமைந்துள்ள ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் உலக பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார். சனிக்கிழமைகளில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூரில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வந்து வழிபாடு செய்வது வழக்கம். ஆடி மாத முதல் சனிக்கிழமையான இன்று சனீஸ்வர பகவானை தரிசனம் செய்ய பக்தர்கள் அதிகாலை முதல் குவிந்தனர். சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட இடங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன் ற வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து இருந்தனர்.
இதனால் சுமார் 4மணி நேரத்திற்கு மேலாக வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சனீஸ்வர பகவானுக்கு விசேஷ அபிஷேகம், மகா தீபாராதனை இன்று காலை நடைபெற்றது. சனிபகவான் வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றியும் அன்னதானம் செய்தும் பக்தர்கள் வழிபட்டனர். பக்தர்கள் வருகையால் திருநள்ளார் பகுதி முழுவதும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.