< Back
ஆன்மிகம்
Angaraka Chaturthi Viratham
ஆன்மிகம்

அங்காரக சதுர்த்தி விரதத்தின் அற்புத பலன்

தினத்தந்தி
|
25 Jun 2024 6:22 PM IST

அங்காரக சதுர்த்தி விரதத்தின் பலனாக மக்கட்செல்வம் உட்பட அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்றும், செவ்வாய் சம்பந்தமான அனைத்து தோஷமும் நிவர்த்தியாகும் என்றும் நம்பப்படுகிறது.

ஆனி மாதத்தின் 11வது நாளான இன்று சங்கடஹர சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமையும், சங்கடஹரசதுர்த்தியும் இணைந்த நாளான இன்றைய நாள் வினை தீர்க்கும் விநாயகரை வழிபடுவதால் செவ்வாய் பகவானின் அருளையும் பெறலாம் என்பது ஐதீகம்.

உஜ்ஜைனி நகரை ஆட்சி செய்த அரசருக்கு நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லை. அவரது அரசவையில் மருத்துவம், வான சாஸ்திரம், விவசாயம், உளவுத்துறை என்று ஒவ்வொரு துறைக்கும் சிறந்த மந்திரிகள் இருந்தனர். அதே போல் ஜோதிடத்தை எடுத்துச் சொல்லவும் மிகப்பெரிய ஜோதிடர் இருந்தார். ஒரு நாள் அந்த ஜோதிடரை அழைத்த அரசன், "எனக்கு இதுவரை குழந்தை பாக்கியம் கிடைக்காமல் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது. இதனைப் போக்க ஜோதிடத்தில் ஏதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள்" என்று ஆலோசனை கேட்டான்.

(ஜோதிடருக்கும் வெகு காலமாக குழந்தை பாக்கியம் இல்லை).

அரசனின் வருத்தத்தை உணர்ந்த ஜோதிடர், "மன்னா.. செவ்வாய்க்கிழமையும், சதுர்த்தி திதியும் இணையும் நாளை 'அங்காரக சதுர்த்தி' என்பார்கள். அந்த நாளில் விநாயகரையும், முருகரையும் வழிபாடு செய்தால் புத்திரப்பேறு உண்டாகும். உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் சரியாக அமையவில்லை. எனவேதான் செவ்வாயின் பார்வை தோஷத்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. அங்காரகனை திருப்தி செய்ய 'அங்காரக சதுர்த்தி' அன்று நீங்களும், உங்கள் மனைவியும் விரதம் இருங்கள்' என்றார்.

அன்றைய தினம் ஜோதிடர் வீட்டுக்கு வந்ததும், அவரது மனைவி "இன்று அரசவையில் ஏதேனும் விசேஷம் உண்டா?" என்று வழக்கம் போல் விசாரித்தாள். ஜோதிடரும் தன் மனைவிடம், மன்னன் புத்திர பாக்கியம் இல்லை என்று வருத்தப்பட்டது பற்றியும், அவருக்கு அங்காரக சதுர்த்தி விரதம் இருக்கும்படி அறிவுறுத்தியது பற்றியும் கூறினார்.

உடனே ஜோதிடரின் மனைவி, "அங்காரக சதுர்த்தியின் விசேஷம் என்ன?" என்று கேட்டாள். மனைவிக்கு அந்த விரதம் இருக்கும் முறையைப் பற்றி கூறினார், ஜோதிடர்.

"பவுர்ணமி மற்றும் அமாவாசைக்கு பின் வரும் நான்காம் நாள் திதியே 'சதுர்த்தி திதி'. இதில் தேய்பிறையில் (பவுர்ணமிக்குப் பிறகு) வரும் சதுர்த்தியை, 'சங்கடஹர சதுர்த்தி' என்பார்கள். சதுர்த்தி திதியும் செவ்வாய்க்கிழமையும் சேர்ந்து வரக்கூடிய தினத்தையே 'அங்காரக சதுர்த்தி' என்கிறோம். அன்று காலை குளித்துவிட்டு விநாயகப்பெருமானையும், முருகப்பெருமானையும் விரதம் இருந்து பூஜிக்க வேண்டும். விநாயகரை அருகம்புல் கொண்டு அர்ச்சிப்பது விசேஷமானது. விநாயகருக்கு கொழுக்கட்டையும், முருகப்பெருமானுக்கு தேன் கலந்த தினை மாவும் நைவேத்தியமாக படைக்க வேண்டும். இவ்வாறு விரதம் இருந்து பூஜிப்பவர்களுக்கு அங்காரகன் அருள்புரிவார். இந்த விரதத்தின் பலனாக மக்கட்செல்வம் உட்பட அனைத்து செல்வங்களும் கிடைக்கும். செவ்வாய் சம்பந்தமான அனைத்து தோஷமும் நிவர்த்தியாகும்" என்றார்.

பின்னர் "அடுத்த வாரம் வரும் அங்காரக சதுர்த்தி அன்று, அரசரையும் அவரது மனைவியையும் விரதம் இருக்கச் சொல்லி உள்ளேன்" என்றும் தெரிவித்தார். இதைக் கேட்ட ஜோதிடரின் மனைவி, தானும் அந்த விரதத்தை மேற்கொள்ளப் போவதாக கூறினாள். ஒரே நேரத்தில் மன்னனின் மனைவியும், ஜோதிடரின் மனைவியும் 'அங்காரக சதுர்த்தி' விரதம் இருந்தார்கள்.

விரதம் இருந்த ஒரு வருடத்திற்குள் அவர்களுக்கு பலன் கிடைத்தது. மன்னனுக்கும், ஜோதிடருக்கும் ஒரே நேரத்தில் செவ்வாய்க்கிழமை அன்று, செவ்வாய் நட்சத்திரமான மிருகசீரிஷ நட்சத்திரத்தில் செவ்வாயின் லக்னமான மேஷ லக்னத்தில் ஆண் குழந்தைகள் பிறந்தன. மன்னன் மகிழ்ச்சியடைந்து, ஜோதிடரை அழைத்து ஆயிரம் பொன்னை பரிசாக அளித்தான்.

அதைத் தொடர்ந்து மன்னனின் மகனுக்கு பெயர் சூட்டு விழா நடத்தி, அந்தக் குழந்தையின் ஜாதகத்தை ஆராய்ந்த ஜோதிடர், "மன்னா.. உங்கள் பிள்ளை, தனது 21-வது வயதில் இந்த நாட்டின் அரசனாக முடி சூட்டிக்கொள்வான். புகழ்பெற்று விளங்குவான். சகலவிதமான மரியாதையும் அவனுக்கு கிடைக்கும். இது ராஜயோக ஜாதகம்" என்று கூறினார்.

பின்னர் வீட்டிற்கு வந்த ஜோதிடரிடம் அவரது மனைவி, "நம் பிள்ளையின் ஜாதகம் எப்படி இருக்கிறது?" என்று கேட்டாள். அதற்கு ஜோதிடர், "அரசரின் குழந்தையும், நம் குழந்தையும் ஒரே நேரத்தில் பிறந்தது. இரண்டுமே ராஜ யோக ஜாதகம்" என்றார்.ஜோதிடரின் பிள்ளை வளர்ந்தான். அவன் தந்தையின் சொல்லுக்கு கட்டுப்படவில்லை. தந்தைக்கும், மகனுக்கும் கருத்து முரண்பாடு வளர்ந்தது. வாலிபனான ஜோதிடரின் மகன், 19-வது வயதில் வீட்டை விட்டு வெளியேறிவிட்டான். ஜோதிடர் தன் மகனை, இரண்டு ஆண்டுகள் தீவிரமாக பல இடங்களில் தேடியும் அவனை கண்டு பிடிக்க முடியவில்லை. மகன் உயிருடன் இருக்கிறானா, இல்லையா என்பதைக் கூட அவரால் அறிய முடியவில்லை. வருத்தத்தில் துவண்டு போனார், ஜோதிடர்.

அதே நேரம் சிறப்பான முறையில் வளர்ந்து நின்றான், மன்னனின் மகன். அரசர் தனக்கு வயதான காரணத்தால், பிள்ளைக்கு முடி சூட்ட எண்ணினார். அதற்கான நாள் பார்த்து சொல்லும்படி ஜோதிடரை அழைத்து கேட்டார். நாள் குறித்துக் கொடுத்தார், ஜோதிடர். மன்னனின் மகன் 21 வயதில் அந்த நாட்டின் மன்னனாக முடி சூட்டிக் கொண்டான். அவன் பட்டம் ஏற்ற மறுதினம் இரவு, செவ்வாய்க் கிழமை செவ்வாய் ஓரையில், நதிக்கரை ஒன்றில் அமர்ந்திருந்த ஜோதிடர், தன்னிடம் இருந்த அற்புதமான ஜோதிட ஓலைச் சுவடிகளை நெருப்பில் போட்டு கொளுத்தினார்.

அப்போது உயர்ந்த தோற்றத்துடன், ஜொலிக்கும் சிவப்பு நிற ஆடை அணிந்து, தாடி, மீசையுடன் ஒரு பெரியவர் அங்கு வந்தார். அவர், "ஜோதிடரே.. என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்டார்.

அதற்கு ஜோதிடர், "நான் சொன்னபடி என் மகனுக்கு அதிர்ஷ்டம் இல்லை. ஒரே நேரத்தில் மன்னனின் மகனும், என் மகனும் பிறந்தனர். மன்னனின் மகன், இந்த நாட்டையே ஆள்கிறான். ஆனால் என் மகனோ, கண்காணாமல் போய்விட்டான். இந்த துக்கத்தை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நான் சொன்ன ஜோதிடம் பொய்த்து விட்டது" என்றார்.

அதற்கு அந்த பெரியவர், "நீங்கள் சொன்ன ஜோதிடம் பொய்க்கவில்லை" என்றார்.

அதைக் கேட்ட ஜோதிடர், "அதை உறுதிப்படுத்திச் சொல்வதற்கு, ஜோதிடர் நீங்களா? நானா?" ஆவேசமாக கேட்டார், ஜோதிடர்.

அப்போது அந்த பெரியவர், "மன்னனின் ஜாதகத்திலும், உங்கள் பிள்ளையின் ஜாதகத்திலும், எந்தக் கிரகம் யோகத்தை தந்தது" என்று கேட்க, 'அங்காரகன்' என்று பதிலளித்தார், ஜோதிடர்.

"அந்த அங்காரகனே நான்தான்" என்று பெரியவர் சொன்னதும், சர்வமும் ஒடுங்கி எழுந்து, அவரை கைகூப்பி நின்றார் ஜோதிடர்.",

இப்போது அங்காரகன் மேலும் சொன்னார். "நன்றாகக் கேள்.. மன்னனுடைய ஜாதகத்தில், மகன் நாட்டை ஆள்வதை காணக்கூடிய யோகம் இருந்தது. ஆனால் உன் ஜாதகத்தில், நீ உன் பிள்ளை நாட்டை ஆள்வதை பார்க்கும் யோகம் இல்லை.

உனக்கு ஜாதகத்தில் புத்திர சோகம் உள்ளது. மன்னனின் ஜாதகத்திலோ புத்திர யோகம் உள்ளது. அதனால்தான் உன் மகனால் இப்போது நீ சோகத்தில் வருந்துகிறாய். ஆனால் நீ கணித்தபடியே உன் பிள்ளை இப்போது அரசனாகத்தான் இருக்கிறான்.

கடல் வழியாக ஆயிரம் மைல் கடந்து, ஒரு தீவை அடைந்தான் உன் மகன். அவன் சென்ற நேரத்தில் அந்த தீவை ஆட்சி செய்த மன்னன் இறந்து விட்டான். அவனுக்கு பிள்ளை இல்லாததால், அவர்களின் வழக்கப்படி யானை மாலையிடும் நபரை மன்னனாக தேர்ந்தெடுக்க முடிவெடுத்திருந்தனர்.

அந்த யானை மாலையை அணிவித்தது உன் மகனின் கழுத்தில். அதனால் மன்னனாக முடிசூட்டிய உன் பிள்ளை, அங்கு சிறப்பான ஆட்சியை செலுத்தி வருகிறான். உன் ஜோதிடம் பொய்க்கவில்லை. நீ இருந்த அங்காரக சதுர்த்தி விரத பலன் உனக்கு முழுமையாக கிடைத்துள்ளது" என்று கூறிய அங்காரகன் மறைந்தார்.

தன் பிள்ளையின் ராஜ வாழ்க்கையைப் பற்றி அறிந்துகொண்ட ஜோதிடர், மன மகிழ்வோடு இல்லம் திரும்பினார்.

மேலும் செய்திகள்