இன்று ஆடிப்பூரம்.. அம்பாள் அருள் கிடைக்க வீட்டிலேயே பூஜை செய்யலாம்
|வீட்டில் அம்மன் விக்கிரகம் வைத்து வழிபாடு செய்பவர்கள் அந்த விக்ரகத்திற்கு வளையல் மாலை அணிவித்து வழிபட வேண்டும்.
ஆடி மாதம் அம்பாளை வழிபாடு செய்வதற்கான உகந்த மாதமாகும். ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில்தான் அம்மன் அவதரித்ததாக சொல்லப்படுகிறது. அன்றைய தினம், அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவதோடு, அம்பாளுக்கு வளையல்கள் அணிவிக்கும் நிகழ்வும் நடத்தப்படும். இந்த நாளில் பக்தர்கள், குறிப்பாக பெண்கள் பலரும் வளையல்களை வாங்கிச் சென்று, அம்பாள் வழிபாட்டிற்கு கொடுப்பார்கள். பலரும் கொடுக்கும் வளையல்கள் ஒன்றாக பூஜையில் வைக்கப்பட்டு, வழிபாட்டிற்கு பின்னர் அந்த வளையல்கள் பக்தர்களுக்கே மீண்டும் பிரசாதமாக வழங்கப்படும். அந்த வளையல்களை பெண்கள் அணிந்து கொண்டால், மனம் போல் மாங்கல்யம் அமையும். திருமணமான பெண்களுக்கு மாங்கல்யம் நிலைக்கும். அம்பிகை வளையல் அணிந்து, தாய்மை கோலம் கொண்ட நாளாகவும் ஆடிப்பூரம் இருப்பதால், இந்த நாளில் வழிபடும் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.
மகாலட்சுமியின் மறு அம்சமாகவும், பன்னிரு ஆழ்வார்களில் ஒருவராகவும் போற்றப்படும் ஆண்டாள் அவதரித்த தினமாகவும் ஆடிப்பூரத் திருநாள் கொண்டாடப்படுகிறது. ஆண்டாள் ஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறது.
இவ்வாறு, இந்துக்களின் மிக முக்கியமான வழிபாட்டு நாட்களில் ஒன்றான ஆடித் திருநாள் இன்று (7-8-2024) கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் ஆலயங்களுக்கு சென்று சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்வது சிறப்பு.
ஆலயங்களுக்கு செல்ல முடியாத பெண்கள் வீட்டிலேயே ஆடிப்பூர வழிபாட்டை மேற்கொள்ளலாம். வீட்டில் அம்மன் விக்கிரகம் வைத்து வழிபாடு செய்பவர்கள் அந்த விக்ரகத்திற்கு அபிஷேக அலங்காரம் செய்து நைவேத்தியம் படைத்து வழிபடலாம். குறிப்பாக, வளையல் மாலை அணிவித்து வழிபட வேண்டும். அல்லது அம்மன் படத்திற்கு வளையல் அலங்காரம் செய்து இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். அம்மனுக்கு வளையல் அலங்காரம் தவிர, ஒரு தட்டில் வளையல்களை வைக்கவேண்டும். பூஜைக்கு பின்னர் இந்த வளையல்களில் ஓரிரு வளையல்களை தாங்கள் அணிந்துகொள்ளவேண்டும். மற்ற வளையல்களை பிரசாதமாக மற்ற பெண்களுக்கு வழங்கவேண்டும். அதுவும் கர்ப்பிணிகளுக்கு வளையல் கொடுப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது.
ஆண்டாளை வழிபடுபவர்கள், ஆண்டாள் படத்தை வைத்து ஆண்டாளுக்கு விருப்பமான தாமரை மலர், கற்கண்டு சாதம் படைத்து வீட்டில் வழிபடலாம். ஆண்டாளை போல் நமக்கும் பெருமாளின் அருள் முழுவதுமாக கிடைக்க வேண்டும் என மனதார வேண்டிக் கொண்டு பூஜை செய்யவேண்டும். ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடல்களை பாடியோ, அவரது திருநாமங்களை உச்சரித்தோ அவரது அருளை வேண்டலாம். குறிப்பாக, ஆண்டாளுக்கு விருப்பமான துளசி இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்வது சிறப்பு. வீட்டின் பூஜை அறையில் தாமரைப்பூ கோலமிட்டு, அதில் ஆண்டாளின் படம் அல்லது சிலையை வைத்தும் வழிபடலாம். வீட்டில் ஆண்டாள் படம் இல்லாதவர்கள், மகாலட்சுமி அல்லது மகாலட்சுமியுடன் இருக்கும் திருப்பதி பெருமாள் படத்தை வைத்து, நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபடலாம்.
மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional