< Back
உலக செய்திகள்
Youngest Indian Everest summiter
உலக செய்திகள்

மிக இளம் வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறிய மும்பை மாணவி.. நேபாள பிரதமர் வாழ்த்து

தினத்தந்தி
|
29 May 2024 9:32 PM IST

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவோரின் கண்ணியம் மற்றும் பாதுகாப்பு, நேபாள அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமைகள் என்று பிரதமர் பிரசந்தா கூறினார்.

காத்மாண்டு:

இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த பள்ளி மாணவி காம்யா கார்த்திகேயன் (வயது 16), சமீபத்தில் நேபாளத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தார். இதன்மூலம் எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய இளம் வயது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.

இந்நிலையில், சர்வதேச எவரெஸ்ட் தினத்தை முன்னிட்டு காத்மாண்டுவில் இன்று சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய நேபாள பிரதமர் பிரசந்தா, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த காம்யா கார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இதுதவிர, இந்த ஆண்டின் வசந்த காலத்தில் 30 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த காமி ரீட்டா ஷெர்பாவையும், 14 மணி நேரம் 31 நிமிடங்களில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த புஞ்சோ லாமாவையும் பிரதமர் பிரசந்தா பாராட்டினார்.

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவோரின் கண்ணியம் மற்றும் பாதுகாப்பு நேபாள அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமைகள் என்றும் பிரசந்தா கூறினார். மேலும் மலை சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக தங்கள் உயிரை பயணம் வைத்துள்ள ஷெர்பாக்கள் மற்றும் பிற மலையேற்ற வழிகாட்டிகளுக்கு உதவுவதற்காக நல நிதி உருவாக்கப்படும் என்றும் அறிவித்தார். நேபாள அரசாங்கம் இந்த ஆண்டில் 1.6 மில்லியன் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

8848.86 மீட்டர் உயரமுள்ள உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் முதலில் ஏறிய தினத்தை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 29 அன்று சர்வதேச எவரெஸ்ட் தினம் கொண்டாடப்படுகிறது. 1953-ல் நேபாளத்தின் டென்சிங் நார்கே மற்றும் நியூசிலாந்தைச் சேர்ந்த எட்மண்ட் ஹிலாரி ஆகியோர் எவரெஸ்ட் சிகரத்தில் முதலில் ஏறினர். அதன்பின்னர் இதுவரை 8,000-க்கும் மேற்பட்டோர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்