'யோகாவுக்கும், ஐ.நா. சபைக்கும் உள்ள ஒற்றுமை..." - டென்னிஸ் பிரான்சிஸ் பேச்சு
|ஐ.நா. சபைக்கான சிறந்த உருவகமாக யோகா திகழ்கிறது என ஐ.நா. சபை தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்,
யோகாவை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டு தோறும் ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதன்படி 10-வது யோகா தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி யோகா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நாடுகளில் யோகாசன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இந்நிலையில் ஐ.நா. சபைக்கான சிறந்த உருவகமாக யோகா திகழ்கிறது என ஐ.நா. சபை தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு டென்னிஸ் பிரான்சிஸ் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது;-
"ஐ.நா. சபைக்கான சிறந்த உருவகமாக யோகா திகழ்கிறது. யோகா மனித சக்தியின் பல்வேறு அம்சங்களை ஒன்றிணைத்து சமநிலையை உருவாக்குகிறது. அதுபோல, ஐக்கிய நாடுகள் சபை பல்வேறு நாடுகளையும், கலாச்சாரங்களையும் ஒன்றிணைத்து பொதுவான இலக்குகளை அடையச் செய்கிறது. இந்த ஒற்றுமையின் மூலம் தனித்தனியான பகுதிகள் ஒன்றிணைந்து தங்களை விட மேலான ஒருங்கிணைந்த கூட்டு சக்தியை உருவாக்குகின்றன."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.