இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஏமன்; 16 பேர் காயம்
|காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படும் வரை தாக்குதலை நிறுத்த போவதில்லை என்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
டெல் அவிவ்,
இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, காசாவை இலக்காக கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஓராண்டை கடந்து நடந்து வரும் மோதலில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து உள்ளது. இதற்காக தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகர் மீது ஏமன் நாட்டில் இருந்து நேற்றிரவு ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் நடத்தப்பட்டபோது, எச்சரிக்கைக்கான அபாய ஒலி எழுப்பப்பட்டது. இதனால், இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பு தேடி, பல்வேறு இடங்களுக்கும் சென்று தஞ்சமடைந்தனர். அப்போது 14 பேருக்கு லேசான அளவில் காயம் ஏற்பட்டது.
இந்நிலையில், ராக்கெட் தாக்கியதில் 16 பேருக்கு காயம் ஏற்பட்டது. ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலுள்ள தலைநகர் சனாவில் 2 நாட்களுக்கு முன்பு, இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. அதனுடன் துறைமுக நகரான ஹொடெய்டா மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 9 பேர் பலியானார்கள்.
இஸ்ரேலில் உள்ள பள்ளி கட்டிடம் ஒன்றின் மீது, நீண்டதூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட ராக்கெட் தாக்குதலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சமீபத்தில் நடத்தினர். இதற்கு பதிலடியாகவே இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
காசாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போரின்போது, 200-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் மற்றும் ஆளில்லா விமானங்களை கொண்டு, ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்கினர் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
எனினும், காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படும் வரை தாக்குதலை நிறுத்த போவதில்லை என்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். அவர்கள் செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா பகுதிகளிலும் கப்பல்களை குறி வைத்து தாக்கி வருகின்றனர்.