< Back
உலக செய்திகள்
ஆண்களை விட அதிக காலம் வாழும் பெண்கள்; ஆய்வில் வெளியான தகவல்
உலக செய்திகள்

ஆண்களை விட அதிக காலம் வாழும் பெண்கள்; ஆய்வில் வெளியான தகவல்

தினத்தந்தி
|
8 March 2025 7:17 AM IST

வயது முதிர்ந்த காலத்தில், ஆண்களை விட பெண்கள் உடல் ரீதியாக துன்பங்களை எதிர்கொள்பவர்களாக உள்ளனர் என்றும் ஆய்வு தெரிவிக்கிறது.

நியூயார்க்,

சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பெண்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. ஆண்களை விட பெண்கள் நீண்ட காலம் வாழ்வதற்கான விசயங்கள், காரணங்கள் மற்றும் அதற்கான விளக்கங்கள் தெரிய வந்துள்ளன.

அமெரிக்காவில் பெண்களின் வாழும் காலம் 80 ஆண்டுகளாக உள்ளது. அதுவே ஆண்கள் என்றால் 75 ஆண்டுகள் என்ற அளவில் உள்ளது. இதன்படி, ஆண்களை விட பெண்கள் அதிக காலம் வாழ்கின்றனர். எந்த நாட்டில் பெண்கள் வாழ்கின்றனர், எவ்வளவு பணம் சம்பாதிக்கின்றனர் மற்றும் பிற காரணிகள் எல்லாம் இந்த கணக்கில் இல்லை என்பதே உண்மையாக இருக்கிறது. இன்னும் சொல்வதென்றால், பிற பாலூட்டிகளிலும் கூட இதுவே உண்மையாக இருக்கிறது.

இதுபற்றி சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியையான டாக்டர் டேனா துபால் கூறும்போது, உலகம் முழுவதும் இது ஒரு முழுமையாக புரிந்து கொள்ளப்படாத மற்றும் இயற்கையாகவே காணப்படும் ஒரு நிகழ்வாகவே உள்ளது என கூறுகிறார். அதிலும், உடல்நலம் பாதிக்கப்படுதல், பஞ்சம், பெருந்தொற்றுகள் மற்றும் பட்டினி ஏற்படும் காலங்களில் கூட முற்றிலும் அவர்களுக்கு பாதுகாப்பான சூழலே உள்ளது என கூறியுள்ளார்.

ஆனால் இதற்கான காரணங்கள் என்ன? அவை சிக்கலாக உள்ளன. குறைவாகவே விளக்கப்பட்டும் உள்ளன. ஆண்களை விட பெண்கள் அதிக காலம் வாழ்கின்றனர் என்றால், அவர்கள் சிறந்ததொரு வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்பது பொருளல்ல என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விசயம்.

இதில் மற்றொரு கவனிக்கப்பட வேண்டிய விசயம் என்னவென்றால், ஆண்களுடன் ஒப்பீட்டளவில், குறைவான சுகாதார சுழற்சி காலங்களையே பெண்கள் கொண்டிருக்கின்றனர் என பெரினைஸ் பெனாயூன் என்ற பேராசிரியர் உறுதிப்படுத்தி உள்ளார். வயது முதிர்ந்த காலத்தில், ஆண்களை விட பெண்கள் உடல் ரீதியாக துன்பங்களை எதிர்கொள்பவர்களாக உள்ளனர். எதிர்ப்பாற்றல் குறைந்து பாதுகாப்பற்றவர்களாக உள்ளனர்.

மெனோபாசுக்கு பின்னர், அவர்களுக்கு வயது முதிர்வால் இதயம் சார்ந்த விசயங்கள் மற்றும் அல்சீமர்ஸ் எனப்படும் ஞாபக மறதி வியாதிகள் ஆகியவை ஏற்படுவதற்கான ஆபத்து அதிகம் உள்ளது என 2021-ம் ஆண்டு வெளியான ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

பெண்களின் வாழ்நாள் அதிகரிப்புக்கு மரபணு மாற்றங்கள், ஹார்மோன்கள், வாழ்க்கை முறை மற்றும் செயல்படும் முறை ஆகியவை முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகின்றன.

இதில் குறிப்பிடும்படியாக, 2 எக்ஸ் குரோமோசோம்கள் கொண்ட பெண்களுக்கு அதிக வாழ்நாளுக்கான சாத்தியமும், எக்ஸ் மற்றும் ஒய் குரோமோசோம்கள் கொண்ட ஆண்களுக்கு குறைவான வாழ்நாளும் உள்ளது எலிகளிடம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. மனிதர்களிடம் இது காணப்படாவிட்டாலும், மனிதர்களிடமும் இதனையொத்த ஹார்மோன்கள் மற்றும் செக்ஸ் குரோமோசோம்கள் மற்றும் இனப்பெருக்க மண்டலம் ஆகியவை அமைந்துள்ளன. அதனால், இந்த ஆய்வுகள் மக்களுக்கும் பொருந்த கூடும் என பேராசிரியையான ஆய்வாளர் துபால் கூறுகிறார்.

ஹார்மோன்களை எடுத்து கொண்டால், பெண்களுக்கான ஈஸ்டிரோஜன் ஹார்மோன் அவர்களுடைய வாழ்நாள் நீட்டிப்புக்கு காரணியாக அமைவதுடன், எதிர்ப்பு சக்திக்கான விளைவுகளையும் ஏற்படுத்துகிறது என நிறைய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மெனோபாஸ் ஏற்படுவதற்கு முன்பு, பெண்களின் எதிர்ப்பு மண்டலம் சிறப்பாக உள்ளது. 50 வயதுக்கு மேல் மெனோபாஸ் ஏற்படும் பெண்கள் வாழும் காலம் ஆனது, அதற்கு முன்பே மெனோபாஸ் ஏற்படுபவர்களை விட கூடுதலாக உள்ளது என 2017-ம் ஆண்டு வெளியான பெண்களின் சுகாதாரம் பற்றிய ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கின்றது.

ஆண்கள் மற்றும் பெண்கள் இடையே செயல்பாட்டு முறைகளிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. இவற்றில் புகை பிடித்தல், மதுபானம் அதிகம் குடித்தல் போன்றவை உயிரிழப்புக்கான முக்கிய காரணிகளாக உள்ளன. பெண்கள் பொதுவாக, சுகாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளில் அதிகம் கவனம் செலுத்துகின்றனர் என்றும் நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். ஆண்களை விட சமூகத்தில் நன்றாக பழக கூடிய தன்மையை கொண்டவர்களாக பெண்கள் உள்ளனர்.

அதனால், சமூகத்தில் இருந்து தனிமைப்படுதல் மற்றும் தனியாக இருத்தல் போன்ற எதிர்மறையான விளைவுகளில் இருந்து அவர்கள் பாதுகாக்கப்படுகின்றனர். அமெரிக்காவில் 2010-2021 வரையிலான ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவு 2023-ம் ஆண்டில் வெளியானது. அதில், தூக்க மருந்துகளை அதிகம் எடுத்து கொள்வதனாலோ அல்லது தற்கொலை செய்து கொண்டோ உயிரிழப்பது என்பது பெண்களில் குறைவாக காணப்படுகிறது என அந்த ஆய்வு தெரிவிக்கின்றது.

மேலும் செய்திகள்