< Back
உலக செய்திகள்
உக்ரைன் போரில் ரஷியா அணு ஆயுதங்களை பயன்படுத்துமா? புதின் நடவடிக்கையால் பரபரப்பு
உலக செய்திகள்

உக்ரைன் போரில் ரஷியா அணு ஆயுதங்களை பயன்படுத்துமா? புதின் நடவடிக்கையால் பரபரப்பு

தினத்தந்தி
|
19 Nov 2024 3:59 PM IST

அணு ஆயுத பயன்பாடு தொடர்பான புதிய கொள்கையில் ரஷிய அதிபர் புதின் கையெழுத்திட்டுள்ளார்.

மாஸ்கோ,

ரஷியா-உக்ரைன் போர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கு நாடுகள் பொருளாதார மற்றும் ராணுவ உதவிகளை வழங்கி வருகின்றன. அதே சமயம் ரஷியா, தொடர்ந்து தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த போரில் இருதரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.

கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி உக்ரைன் மீது ரஷிய படைகள் தாக்குதலை தொடங்கிய நிலையில், போர் தொடங்கி ஆயிரமாவது நாளில், ரஷிய அதிபர் புதின் அணு ஆயுத பயன்பாடு தொடர்பான திருத்தியமைக்கப்பட்ட புதிய கொள்கையில் கையெழுத்திட்டுள்ளார். இதன்படி, அணு ஆயுத பலம் கொண்ட ஒரு நாடு, ரஷியாவின் மீது ஏதேனும் ஒரு வகையில் தாக்குதல் நடத்தினால், அதற்கு அணு ஆயுதங்கள் மூலம் பதிலடி கொடுக்க இந்த புதிய கொள்கை வழிவகை செய்கிறது.

இந்த நடவடிக்கையால் உக்ரைன் போரில் ரஷியா அணு ஆயுதங்களை பயன்படுத்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக அமெரிக்கா வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகள் மூலம் ரஷியாவிற்குள் உள்ள இலக்குகளைத் தாக்க சமீபத்தில் உக்ரைனுக்கு ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு அனுமதி வழங்கியது. இந்த நிலையில், அணு ஆயுத பயன்பாடு தொடர்பான புதிய கொள்கையில் அதிபர் புதின் கையெழுத்திட்டுள்ளது, மேற்கு நாடுகளை எச்சரிக்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்