அதானிக்கு எதிராக சதி நடக்கிறதா? ரஷிய ஊடகம் திடுக் தகவல்
|இந்தியாவை தன் வழிக்கு கொண்டு வரும் நோக்கத்துடன், தொழிலதிபர் அதானி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக அமெரிக்காவை மறைமுகமாக சாடி ரஷிய ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது.
மாஸ்கோ,
உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 22-வது இடத்திலும் இந்தியாவின் 2-வது பெரிய பணக்காரருமாக இருப்பவர் கவுதம் அதானி. குஜராத்தை சேர்ந்த இவரது நிறுவனங்கள் இந்தியா மட்டும் இன்றி பல்வேறு நாடுகளிலும் சுரங்கம், துறைமுகங்கள், மின் உற்பத்தி உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வரும் கவுதம் அதானிக்கு எதிராக கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது.
குறிப்பாக அதானி நிறுவனம் பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டு, தங்கள் பங்குகளை போலியாக அதிகரிக்கச் செய்வதாக அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் பங்கு வர்த்தக பகுப்பாய்வு நிறுவனமான ஹுண்டன்பர்க் நிறுவனம் குற்றம் சாட்டி இருந்தது. ஹுண்டன்பர்க் நிறுவனம் முன்வைத்த குற்றச்சாட்டுக்களால் அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. இந்தியாவில் அரசியல் ரீதியாகவும் அதானி- ஹிண்டன்பர்க் விவகாரம் விவாதப்பொருளானது. இந்த சர்ச்சைகளில் இருந்து மெல்ல மெல்ல அதானி நிறுவனம் மீண்டும் வரத்தொடங்கிய நிலையில், அந்த நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்காவில் மற்றொரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சூரிய ஒளி மின்சார ஒப்பந்தங்களை பெற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், அமெரிக்காவில் சூரிய ஒளி மின் உற்பத்தி முதலீட்டாளர்களை ஏமாற்றி மோசடி செய்ததாகவும் அவர் மீது அமெரிக்கா பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளது.இதுதொடர்பாக அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் சார்பில் நியூயார்க் பெடரல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சுமார் ரூ.16 ஆயிரம் கோடி லாபம் ஈட்டக்கூடிய இந்த ஒப்பந்தங்களுக்காக அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை மறைத்து அமெரிக்க முதலீட்டாளர்கள் மற்றும் கடன் தருபவர்களிடம் இருந்து 300 கோடி டாலருக்கு மேல் கடனாகவும், பத்திரமாகவும் அதானி நிறுவனம் பெற்றுள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அதானி மற்றும் சாகர் அதானிக்கு நியூயார்க் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து உள்ளது.
ரஷியா ஊடகம் சொல்வது என்ன?
அதானி நிறுவனம் மீதான இந்த குற்றச்சாட்டுகளால் அவரது நிறுவன பங்குகள் நேற்று கடுமையாக வீழ்ச்சி அடைந்தன. இதனிடையே, அதானிக்கு எதிராக எழுப்பப்படும் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பின்னணியில் அமெரிக்கா இருக்கலாம் என ரஷியாவின் அரசு ஊடக நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து விவரம் வருமாறு: அதானி நிறுவனத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஒரு தலைபட்சமானது போலவும் சர்வதேச அளவில் அந்த நிறுவனத்தின் செல்வாக்கு அதிகரித்து வருவதற்கு எதிரான நடவடிக்கை போலவும் தெரிகிறது.
குறிப்பாக அதானி நிறுவனத்திற்கு எதிரான சமீபத்திய குற்றச்சாட்டுகள் அந்த நிறுவனத்திற்கும் எஸ்.பி.ஐ மற்றும் எல்.ஐ.சி நிறுவனங்களுக்கு இடையேயான கடன் திட்டத்தை சீர்குலைக்கும் அமெரிக்காவின் தீவிரமான திட்டங்களில் ஒன்றாக தெரிகிறது. அதேபோல, அமெரிக்காவின் முடிவுகளை ஏற்காமல் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை முடிவுகளை எடுக்கும் இந்தியாவை வழிக்கு கொண்டு வருவதற்காக, அந்நாட்டு அரசு அதிகாரிகள் செய்துள்ள திட்டமிட்ட சதி போல உள்ளது. அதானி நிறுவனம் சர்வதேச அளவில் தனது முதலீட்டை விரிவுபடுத்துவது மேற்கு நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.