பழிவாங்கிய முன்னாள் கூட்டாளி.. போதைப்பொருள் கடத்தல்காரன் சுனில் யாதவ் அமெரிக்காவில் சுட்டுக்கொலை
|லாரன்ஸ் பிஷ்னோயிடம் இருந்து பிரிந்து தனித்து செயல்பட்டு வந்த நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கலிபோர்னியா:
இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் பாசில்கா மாவட்டத்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் சுனில் யாதவ் அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு நிழலுலக தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் கூட்டாளி ரோகித் கோடரா பொறுப்பேற்றுள்ளார்.
"எங்கள் சகோதரர் அங்கித் பாது என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதற்காக சுனில் யாதவ் பஞ்சாப் போலீசாருடன் இணைந்து செயல்பட்டார். இதற்காக நாங்கள் அவரைப் பழிவாங்கினோம். அங்கித் பாதுவின் என்கவுன்டரில் அவரது பெயர் அடிபட்டவுடன் நாட்டை விட்டு ஓடிவிட்டார். அமெரிக்காவில், அவர் எங்கள் சகோதரர்கள் பற்றிய தகவல்களை பரப்பி வந்தார்" என ரோகித் கோடரா கூறி உள்ளார்.
கொலை செய்யப்பட்ட சுனில் யாதவும் லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பலைச் சேர்ந்தவர்தான். ராஜஸ்தானில் இவர் மீது கொலை, கொள்ளை, போதைப் பொருள் கடத்தல் என பல்வேறு வழக்குகள் உள்ளன. பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் போதைப்பொருள் கடத்துவதில் பிரபலமானவர். சில ஆண்டுகளுக்கு முன், 300 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டபோது இவரது பெயர் வெளியானது.
பின்னர் லாரன்ஸ் பிஷ்னோயிடம் இருந்து பிரிந்து தனித்து செயல்பட்டு வந்தார். அமெரிக்காவுக்கு செல்வதற்கு முன்பு சுனில் யாதவ், துபாயில் வசித்து வந்தார்.
சமீபத்தில், சுனில் யாதவுக்கு எதிராக ராஜஸ்தான் காவல்துறை ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட்டது. துபாயில் உள்ள புலனாய்வு ஏஜென்சிகள் மூலம் அங்குள்ள அவரது கூட்டாளியையும் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.