< Back
உலக செய்திகள்
அமெரிக்கா:  காதலியின் புதிய சிகை அலங்காரம் பிடிக்காத ஆத்திரத்தில்... காதலர் வெறிச்செயல்
உலக செய்திகள்

அமெரிக்கா: காதலியின் புதிய சிகை அலங்காரம் பிடிக்காத ஆத்திரத்தில்... காதலர் வெறிச்செயல்

தினத்தந்தி
|
8 Nov 2024 2:54 AM IST

அமெரிக்காவில் காதலி புதிய சிகை அலங்காரம் செய்தது பிடிக்காமல் அவரை கத்தியால் குத்தி காதலர் படுகொலை செய்தது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

பென்சில்வேனியா,

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் வசித்து வருபவர் பெஞ்சமின் குவால் (வயது 49). இவருடைய காதலி கார்மென் மார்டினெஸ் சில்வா (வயது 50). இந்நிலையில், கார்மென் தலைமுடியை வெட்டி அலங்கரித்து இருக்கிறார். இந்த புதிய சிகை அலங்காரம் பெஞ்சமினுக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. அவர் மனஉளைச்சலில் இருந்துள்ளார். இதனால், கார்மெனை கத்தியால் குத்த போகிறேன் என மிரட்டியிருக்கிறார்.

இதனை தொடர்ந்து, அச்சமடைந்த கார்மென் இரவில் மகளின் வீட்டில் தஞ்சமடைந்து உள்ளார். அடுத்த நாள் காலையில், பாதுகாப்புக்காக சகோதரரின் வீட்டுக்கு சென்றதுடன், தோழி ஒருவரை தொடர்பு கொண்டு பெஞ்சமின் உடனான உறவு முடிந்து விட்டது என கூறி விடும்படி தெரிவித்து இருக்கிறார்.

ஆனால், கார்மெனை தேடி அலைந்த பெஞ்சமின், அவர் சகோதரர் வீட்டில் தங்கியிருக்கிறார் என தெரிந்து கொண்டார். இதனால், அவருடைய வீட்டுக்கு சென்றிருக்கிறார். ஆனால், கார்மென் வீட்டில் இல்லை என பதில் வந்துள்ளது. இதனையடுத்து திரும்பி சென்ற பெஞ்சமின் சில நிமிடங்களுக்கு பின் மீண்டும் கார்மெனை தேடி வந்திருக்கிறார். அவர், கார்மென்னின் சகோதரரை கத்தியால் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதனை பார்த்த கார்மன் சகோதரரை காப்பாற்றுவதற்காக ஓடி சென்றுள்ளார். ஆனால், பெஞ்சமினின் கோபம் அவர் மீது திரும்பியுள்ளது. அவரை கடுமையாக தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் கார்மென் படுகாயமடைந்து உயிரிழந்து விட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் வந்தபோது, கார்மெனின் உடல் கிடந்துள்ளது. அவருடைய சகோதரர் காயங்களுடன் பக்கத்தில் கிடந்திருக்கிறார். இந்த சண்டையை தடுக்க முயன்ற 2 பேர் மீதும் பெஞ்சமின் கொலைவெறி தாக்குதலை நடத்தியிருக்கிறார். எனினும் அவர்கள் தப்பி விட்டனர். ஆனால், ஆயுதத்துடன் அந்த இடத்தில் இருந்து செல்லாமல் பெஞ்சமின் இருந்துள்ளார்.

அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதன்பின்பு, லான்கேஸ்டர் கவுன்டி சிறையில் பெஞ்சமின் அடைக்கப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்