< Back
உலக செய்திகள்
ஏமன் மீது அமெரிக்கா, இங்கிலாந்து வான்வழி தாக்குதல்
உலக செய்திகள்

ஏமன் மீது அமெரிக்கா, இங்கிலாந்து வான்வழி தாக்குதல்

தினத்தந்தி
|
31 Dec 2024 12:25 PM IST

ஏமன் மீது அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளன.

சனா,

இஸ்ரேல், காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழு இடையே ஓராண்டுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, இந்த போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.

மேலும், ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஆதரவு என்ற பெயரில் செங்கடல் பகுதியில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்ரேல் மீதும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து போன்றவை பதிலடி தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், ஏமனின் அல் ஹுடெடா மாகாணம் அட்-துஹயாதா மாவட்டம் அல்-பசா பகுதியில் நேற்று அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் விமானப்படை விமானங்கள் வான்வழி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை. கடந்த வாரம் ஏமனில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர் என்பது கூறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்