சட்ட விரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்களை தனி விமானம் மூலம் திருப்பி அனுப்பும் அமெரிக்கா
|அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்களை தனி விமானம் மூலம் திருப்பி அனுப்ப அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
வாஷிங்டன்,
அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை கண்டறிந்து அவர்களின் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை(டி.எச்.எஸ்.) நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன்படி 2024-ம் நிதியாண்டில் இதுவரை அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் பேரை கண்டறிந்து, 495 விமானங்கள் மூலம் 145 நாடுகளுக்கு அவர்களை அனுப்பி வைத்துள்ளதாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்த பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக கொலம்பியா, ஈகுவேடார், பெரு, எகிப்து, மொரிடேனியா, செனெகல், உஸ்பெகிஸ்தான், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் தீவிர நடவடிக்கைகளை தொடர்ந்து அமெரிக்காவின் தென்மேற்கு எல்லை வழியாக சட்டவிரோதமாக நுழைபவர்களின் எண்ணிக்கை 55 சதவீதம் குறைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்களை தனி விமானம் மூலம் திருப்பி அனுப்ப அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக ஒரு தனி விமானம் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், அமெரிக்காவில் குடியேற சட்டப்பூர்வமான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொள்வதாகவும் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.