< Back
உலக செய்திகள்
அடுத்த அமெரிக்க ஜனாதிபதி யார்..?  இந்திய நேரப்படி இன்று மாலை வாக்குப்பதிவு தொடக்கம்
உலக செய்திகள்

அடுத்த அமெரிக்க ஜனாதிபதி யார்..? இந்திய நேரப்படி இன்று மாலை வாக்குப்பதிவு தொடக்கம்

தினத்தந்தி
|
5 Nov 2024 8:39 AM IST

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்தவுடனேயே எண்ணிகையும் தொடங்குகிறது.

வாஷிங்டன்,

உலகின் சக்தி வாய்ந்த நாடான அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் 4 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும். தற்போதைய ஜனாதிபதியாக ஜோ பைடன் உள்ளார். அவரது பதவி காலம் வருகிற 2025-ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் முடிவடைகிறது.

நவம்பர் மாதம் முதல் செவ்வாய்க்கிழமை

எனவே அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே தொடங்கிவிட்டன. அந்த நாட்டு சட்டப்படி நவம்பர் மாதம் பிறந்து முதல் செவ்வாய்க்கிழமை அன்று தேர்தல் நடைபெறும்.

ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியான ஜோ பைடன், ஜனநாயக கட்சி சார்பில் தானே போட்டியிடுவதாக அறிவித்தார். அதேபோல குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் களம் இறங்கினார். வயோதிகம் காரணமாக போட்டியில் இருந்து விலகிய ஜனாதிபதி ஜோ பைடன். தனது கட்சி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் போட்டியிடுவார் என்று அறிவித்தார். அதன்படி அவரும் களத்தில் குதித்தார்.

அமெரிக்க மக்கள் தங்கள் ஜனாதிபதியை நேரடியாக தேர்ந்து எடுப்பதில்லை. மாகாணங்களில் மக்கள் அளிக்கும் ஓட்டுகள் கணக்கிடப்பட்டு தேர்வுக்குழு உறுப்பினர்கள் வாயிலாக (எலெக்ட்ரோல் காலேஜ்) ஜனாதிபதி தேர்வு செய்யப்படுவார்.

இந்த எலெக்ட்ரோல் காலேஜ் ஓட்டுகள் ஒவ்வொரு மக்கள் தொகை அடிப்படையில் மாகாணத்துக்கு மாகாணம் வேறுபடும். அந்தவகையில் மக்கள் தொகை அதிகம் உள்ள கலிபோர்னியாவில் 54 எலெக்ட்ரோல் காலேஜ் ஓட்டுகளும், குறைந்த மக்கள் தொகை உள்ள வியாமிங் மாகாணத்தில் 3 ஓட்டுகளும் உள்ளன.

மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் 538 தேர்வுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 270 பேரின் ஆதரவை பெறுபவர்களே ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்படுவார்கள். மொத்தமுள்ள 50 மாகாணங்களில் 48 மாகாணங்களில் அதிக ஓட்டு பெறுபவர்களுக்கு, அனைத்து எலெக்ட்ரோல் ஓட்டுகளும் கிடைத்துவிடும். அவரே வெற்றி பெற்றவராவார். மைன், நெப்ரஸ்கா மாகாணங்களில் மட்டுமே 2-ம் இடம் பெறுபவர்களுக்கு விகிதாசார முறைப்படி ஓட்டு கள் பகிர்ந்து வழங்கப்படும்.

இந்த தேர்தலில் 16 கோடியே 50 லட்சம் பேர் தகுதி படைத்த வாக்காளர்களாக உள்ளனர். அமெரிக்க சட்டப்படி தேர்தலில் முன்கூட்டியே வாக்குகளை செலுத்த முடியும். அதன்படி இ-மெயில் மற்றும் தபால் மூலம் 7 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் ஏற்கனவே வாக்களித்துவிட்டனர்.

இன்று தேர்தல்

தேர்தல் களத்தில் கமலா ஹாரிஸ், டிரம்ப் இடையே கடும் போட்டி இருந்தது. கருத்து கணிப்புகளில் இருவரும் சமபலத்திலேயே இருந்து வந்தனர். 50 மாகாணங்களில் வெற்றியை நிர்ணயிக்கும் மாகாணங்களாக அரிசோனா, ஜார்ஜியா, மிக்சிகன், நெவாடா, வடக்கு கரோலினா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் ஆகியவை உள்ளன. இதில் மிக்சிகன், விஸ்கான்சின் ஆகிய 2 மாகாணங்களில் கமலா ஹாரிஸ் முன்னிலையில் இருக்கிறார். மற்றவற்றில் டிரம்பே முன்னிலையில் இருக்கிறார்.

இந்தநிலையில் ஜனாதிபதி தேர்தலுக்காக வாக்குப்பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் கமலா ஹாரிஸ், இ- மெயில் மூலம் நேற்று தனது வாக்கை செலுத்தினார்.

இந்தியாவில் தேதி மற்றும் நேரம்

அமெரிக்காவில் மாகாணங்களுக்கு இடையே நேர வித்தியாசம் உள்ள நிலையில், இந்திய நேரப்படி இன்று (05-11-2024) மாலை 4.30 மணி முதல் 7.30 மணிக்குள் ஒவ்வொரு மாகாணங்களாக வாக்குப்பதிவு தொடங்கி நாளை கலை 5.30 மணிக்கு நிறைவடையும்.

வாக்குப்பதிவு முடிந்தவுடன், உடனடியாக வாக்கு எண்ணிக்கையும் தொடங்கிவிடும். இழுபறி எதுவும் இல்லை என்றால், அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி யார் என்பது உடனடியாக தெரியவரும். அதிகாரப்பூர்வமான முடிவுகள் நாளை (புதன்கிழமை) தெரிந்துவிடும்.

அதே வேளையில், இறுதி முடிவு அறிவிக்கப்படுவதற்கு சில நாட்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. 2020-ம் ஆண்டில், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 3-ம் தேதி நடந்தன, ஆனால் ஜோ பைடன் நவம்பர் 7-ம் தேதி வரை வெற்றியாளராக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்கணிப்புகள்

ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ், டிரம்ப் இடையே கடும் போட்டி இருந்து வருகிறது.

தற்போதைய நிலையில், அரிசோனா, ஜார்ஜியா, வடக்கு கரோலினா மாகாணங்களில் டிரம்புக்கு 49 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேநேரம், மிச்சிகன், விஸ்கான்சின் மாகாணங்களில் ஹாரிசுக்கு 49 சதவீதம் பேர் ஆதரவாக உள்ளனர். நெவேடா, பெல்சில்வேனியா மாகாணங்களில் இருவருக்கும் 48 சதவீதம் பேர் ஆதரவு தெரிவிப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

பதவியேற்பு

தேர்தல் வாக்குகளை எண்ணி வெற்றியாளரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க ஜனவரி 6ம் தேதி காங்கிரஸ் சபை அமெரிக்காவில் கூடும். புதிய அமெரிக்க ஜனாதிபதி ஜனவரி 20ம் தேதி பதவியேற்பார்.

மேலும் செய்திகள்