உலக செய்திகள்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்; மேடையில் கைகுலுக்கி விவாத நிகழ்ச்சியை தொடங்கிய டிரம்ப்-கமலா ஹாரிஸ்
உலக செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்; மேடையில் கைகுலுக்கி விவாத நிகழ்ச்சியை தொடங்கிய டிரம்ப்-கமலா ஹாரிஸ்

தினத்தந்தி
|
11 Sept 2024 7:50 AM IST

டிரம்பின் பேரணியில் உங்களுடைய (மக்கள்) தேவைகள், உங்களுடைய கனவுகள் மற்றும் விருப்பங்கள் ஆகியவற்றை பற்றி அவர் பேசி நீங்கள் கேட்க முடியாது என்று கமலா ஹாரிஸ் குற்றச்சாட்டாக கூறினார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் நவம்பர் மாதம் 5-ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக, முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக, ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் களமிறங்கியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு 60-க்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், போட்டி வேட்பாளர்கள் இருவரும் நேரடி விவாதத்தில் பங்கேற்கின்றனர். இந்த விவாதத்தில், அமெரிக்காவில் நிலவும் முக்கிய விவகாரங்கள், சிக்கல்கள் அவற்றை தீர்க்கும் வழிமுறைகள் ஆகியவற்றை பற்றி இருவரும் எடுத்துரைப்பார்கள்.

அமெரிக்க மக்களிடையே செல்வாக்கை பெற உதவும் இந்த விவாதம் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த விவாதத்தில், ஆட்சிக்கு வந்த பின் மேற்கொள்ளப்படும் திட்டங்கள், பணிகள் குறித்து வேட்பாளர்கள் இருவரும் கருத்துகளை வெளியிடுவார்கள். எதிரெதிர் வேட்பாளர்களின் குறைகளை பற்றியும் அவர்கள் விமர்சித்து பேசுவார்கள்.

இந்த நிலையில், கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்ப் பங்கேற்கும் நேரடி விவாதம் பிலடெல்பியாவில், இந்திய நேரப்படி இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. இந்த விவாதத்தில், இஸ்ரேல்-ஹமாஸ் போர் மற்றும் உக்ரைன்-ரஷியா இடையேயான போர் உள்ளிட்டவையும் முக்கிய இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவாதத்தின்போது ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்பட்டது பற்றியும் டிரம்ப் பேச உள்ளார்.

இந்த விவாதத்தில், அமெரிக்க நாட்டின் பணவீக்கம், கருக்கலைப்பு விவகாரம் உள்ளிட்டவையும் முக்கிய இடம் பிடிக்கும் என கூறப்படுகிறது. இந்த சூழலில், டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இடையேயான முதல் விவாதத்தில் கலந்து கொள்ள இருவரும் வருகை தந்தனர். அப்போது அவர்கள் இருவரும் ஒன்றாக கைகுலுக்கி கொண்டனர். ஜனாதிபதி தேர்தலுக்கான விவாத மேடையில் போட்டியிடும் வேட்பாளர்கள் கைகுலுக்கி கொள்ளும் இந்த நடைமுறை 8 ஆண்டுகளாக இல்லாத நிலையே இருந்தது. அதனை மாற்றும் வகையில் அவர்கள் இருவரும் கைகுலுக்கி கொண்டது ஆச்சரியத்துடன் பார்க்கப்படுகிறது.

இந்த விவாதத்தின்போது பேசிய கமலா ஹாரிஸ், நம்மை பிரிப்பனவற்றை விட, நாம் அனைவரையும் ஒன்றிணைத்து கொண்டு வருவதற்கான முக்கியத்துவம் பற்றி நன்றாக அறிந்து வைத்திருக்கும் ஜனாதிபதியையே அமெரிக்க மக்கள் விரும்புகிறார்கள் என நான் வலுவாக நம்புகிறேன் என கூறினார்.

2025-ம் ஆண்டுக்கான திட்டங்கள் ஆபத்து நிறைந்தவை என எதிர்க்கட்சியை சாடிய அவர், அனைத்து அமெரிக்கர்களுக்கான ஜனாதிபதியாக இருப்பேன் என உங்களுக்கு நான் உறுதி கூறுகிறேன் என்றார். ஆனால், டிரம்போ 2025-ம் ஆண்டுக்கான திட்டத்தில் அப்படி எதுவும் இல்லை என மறுத்துள்ளார்.

டிரம்பின் முன்னாள் பணியாளர்கள் பலர் கமலாவுக்கு ஆதரவு தெரிவிப்பது பற்றி கமலா ஹாரிஸ் கூறியதற்கு பதிலளித்த டிரம்ப், யார் பணியை சரியாக செய்யவில்லையோ, அவர்களை நான் பணியில் இருந்து தூக்கி விடுவேன் என டிரம்ப் கூறினார்.

தொடர்ந்து கமலா ஹாரிஸ் பேசும்போது, டொனால்டு டிரம்பின் ஒரு பொது கூட்டத்தில் நீங்கள் (மக்கள்) கலந்து கொள்ளுங்கள் என அழைப்பு விடுத்து பேசினார். இதனால் டிரம்ப் ஆச்சரியமடைந்தபோது தொடர்ந்து பேசிய கமலா ஹாரிஸ், பொது கூட்டத்தில் டிரம்ப் பேசும்போது, அதில் உங்களை பற்றிய ஒரு விசயம் எதுவும் இருக்காது.

உங்களை பற்றியோ, உங்களுடைய தேவைகள், உங்களுடைய கனவுகள் மற்றும் விருப்பங்கள் ஆகியவற்றை பற்றியோ பொது கூட்டத்தில் அவர் பேசி நீங்கள் கேட்க முடியாது என்று குற்றச்சாட்டாக கூறினார். தொடர்ந்து இருவர் இடையேயான விவாதம் நடந்தது.

மேலும் செய்திகள்