ஏமன் விமான நிலையம் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல்
|இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக ஏமன் விமான நிலையம் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதனால் அங்கு போர்ப்பதற்றம் தீவிரம் அடைந்துள்ளது.
சனா,
இஸ்ரேல்-காசா போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செயல்படுகின்றனர். எனவே செங்கடல் வழியாக செல்லும் இஸ்ரேல் மற்றும் அதனுடன் தொடர்புடைய கப்பல்கள் மீது அடிக்கடி அவர்கள் தாக்குதல் நடத்துகின்றனர். இதில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மற்ற நாடுகளின் வணிக கப்பல்களும் சேதம் அடைகின்றன. எனவே அந்த வழியாக செல்லும் வணிக கப்பல்களை பாதுகாக்க அமெரிக்கா தலைமையில் ஒரு கூட்டுப்படை உருவாக்கப்பட்டது.
இந்த கூட்டுப்படையில் இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்தன. இந்த கூட்டுப்படையினர் செங்கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.மேலும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினால் உடனடியாக பதிலடியும் கொடுத்து வருகின்றனர். இதற்கிடையே இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சமீபத்தில் சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தினர். இதில் ஒருவர் உயிரிழந்தார். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த உள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு அறிவித்தார்.
இந்தநிலையில் இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து கூட்டுப்படையினர் ஏமன் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில் அங்குள்ள ஹூடைடா விமான நிலையம் மற்றும் கமரன் தீவு ஆகியவை கடுமையாக சேதம் அடைந்தன. இதனால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்த விவரம் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
எனினும் இந்த தாக்குதல் காரணமாக அங்கு விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே இனி வரும் காலங்களில் இங்கிலாந்து, அமெரிக்க வணிக கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு போர்ப்பதற்றம் மேலும் தீவிரம் அடைந்துள்ளது.