< Back
உலக செய்திகள்
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு: டொனால்டு டிரம்பிற்கு அடுத்த வாரம் தண்டனை அறிவிப்பு
உலக செய்திகள்

ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு: டொனால்டு டிரம்பிற்கு அடுத்த வாரம் தண்டனை அறிவிப்பு

தினத்தந்தி
|
4 Jan 2025 11:13 AM IST

ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டொனால்டு டிரம்பிற்கு அடுத்த வாரம் கோர்ட்டு தண்டனை அறிவிக்கிறது.

வாஷிங்டன்,

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொன்லாடு டிரம்ப். இவர் 2017 முதல் 2021ம் ஆண்டு வரை அமெரிக்க ஜனாதிபதியாக பணியாற்றினார். அதேவேளை, நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றிபெற்றார். அவர் வரும் 20ம் தேதி அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார்.

இதனிடையே, அமெரிக்காவை சேர்ந்த ஆபாச பட நடிகை ஸ்டோமி டெனியல்ஸ். இவர் டொனால்டு டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினார். 2006ம் ஆண்டு டொனால்டு டிரம்ப் தன்னுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டதாக ஸ்டோமி டெனியல்ஸ் குற்றஞ்சாட்டினார். மேலும், 2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பு தன்னுடனான பாலியல் உறவு விவகாரத்தை வெளியே கூறிவிடக்கூடாது என்பதற்காக டிரம்ப் தனக்கு பணம் கொடுத்ததாகவும் ஸ்டோமி டெனியல்ஸ் தெரிவித்தார்.

அதேவேளை, தேர்தல் பிரசாரத்திற்கு திரட்டப்பட்ட நிதியில் இருந்து டொனால்டு டிரம்ப் போலி வணிக பதிவுகளை உருவாக்கி 1 லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பணத்தை ஸ்டோமி டெனியல்சுக்கு கொடுத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில் டொனால்டு டிரம்பிற்கு எதிராக பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் டொனால்டு டிரம்ப் குற்றவாளி என்று கடந்த ஆண்டு ஜூன் மாதம் மன்ஹாட்டன் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

இந்நிலையில், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டொனால்டு டிரம்பிற்கு அடுத்த வாரம் கோர்ட்டு தண்டனை அறிவிக்கிறது. அடுத்த வாரம் 10ம் தேதி கோர்ட்டு தண்டனை அறிவிக்கப்படுகிறது.

தண்டனை அறிவிப்பின்போது டொனால்டு டிரம்ப் கோர்ட்டில் நேரிலோ, காணொளி காட்சி மூலமாகவோ ஆஜராக வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார். அதேவேளை, இந்த வழக்கில் டொனால்டு டிரம்பிற்கு சிறை தண்டனை விதிக்கப்படாது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் அபராதம் விதிக்கப்பட்டு டிரம்ப் விடுதலை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

20ம் தேதி அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில் அவர் மீதான வழக்கில் 10ம் தேதி தண்டனை அறிவிக்கப்படும் நிகழ்வு அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்