அந்தமானில் அரசு பஸ் சாலையோர பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 2 பேர் பலி
|அரசு பஸ் சாலையோர பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயமடைந்தனர்.
போர்ட்பிளேர்,
அந்தமானின் புத்த நல்லா பகுதியில் இன்று காலை 7.30 மணியளவில் அரசு பஸ் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அந்த பஸ் ரங்கத்-மாயபந்தர் வழித்தடத்தில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததில் சாலையோரம் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் 10 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேக் செயலிழந்ததால் இந்த விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் இறந்தவர்கள் பெடாபூர் கிராமத்தை சேர்ந்த ஜோயல் டிக்கா மற்றும் காய்கறி விற்பனையாளரான பி.குருமூர்த்தி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். விபத்துக்குள்ளான பஸ்சில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்க கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆனது என்று நேரில் பார்த்தவர்கள் கூறினர். மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளுக்கான போக்குவரத்துத்துறை இயக்குனர் டாக்டர் ஜதிந்தர் சோஹல் கூறுகையில், " இதுவரை, இரண்டு பேர் பலியாகியுள்ளனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மாயாபண்டரில் உள்ள சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒரு குழந்தை உள்பட 5 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். மேல் சிகிச்சைக்காக அவர்களை ஹெலிகாப்டர் மூலம் போர்ட் பிளேருக்கு மாற்ற நாங்கள் பணியாற்றி வருகிறோம் என்றார்.