மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாகும் டிரம்ப்: ரஷியா சொல்வது என்ன..?
|ஜனாதிபதி பதவியை அலங்கரிக்கப்போகும் டிரம்புக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மாஸ்கோ,
உலகின் மிகவும் பழமையான ஜனநாயக நாடான அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடந்தது. இதில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்க உள்ளார். மீண்டும் ஜனாதிபதி பதவியை அலங்கரிக்கப்போகும் டிரம்புக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் வெற்றி பெற்று உள்ளார். அவருக்கு பல்வேறு உலக தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்க தேர்தல் முடிவுகள் தங்களிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என ரஷியா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மரியா ஜகரோவா கூறுகையில், 'அடுத்த அமெரிக்க ஜனாதிபதி, அவர் யாராக இருந்தாலும், சொந்த நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துவதும், அமெரிக்க கடற்கரையிலிருந்து பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் சாகசங்களைத் தேடாமல் இருப்பதும் தர்க்கரீதியானதாக இருக்கும். அமெரிக்கக் கொள்கையில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டாலும், எங்களுக்கு ஏதேனும் முன்மொழிவுகள் தோன்றினாலும், ரஷியாவின் நலன்களுடன் பொருந்தக்கூடிய வகையில் அவற்றை ஆய்வு செய்ய நாங்கள் தயாராக இருப்போம். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குறிப்பாக தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ரஷியா தனது நலன்களை உறுதியாக பாதுகாக்கும். ஜனநாயக நெருக்கடி மற்றும் சமூகத்தின் பிளவு ஆகியவற்றை அமெரிக்கா கடந்து வர வாழ்த்துகிறேன்' என்று அவர் கூறினார்.
இதுதொடர்பாக ரஷியாவின் அரசு செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் கூறுகையில், "அமெரிக்காவுடனான உறவு மிகுந்த தொய்வு நிலையில் இருந்தாலும் அதனுடன் சுமுக உறவை மேற்கொள்வதற்கான பேச்சுவார்தையை நடத்த ரஷியா தயாராகவே உள்ளது. ஆனால், அதற்கு முன்பாக அனைத்தையும் கவனமாக கண்காணித்து ஆராய்வோம். ஜனவரியில் டிரம்ப் ஜனாதிபதியாக வெள்ளை மாளிகைக்கு திரும்பும்போது என்ன நிகழ்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்று அவர் கூறினார்.