டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தியது யார்? என்று எங்களுக்கு தெரியும்: ஜோ பைடன் தகவல்
|டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தியவரின் நோக்கம் தெரியவில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.
வாஷிங்டன்,
அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் போட்டியிடுகிறார். எனவே அவர் நாடு முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
அந்தவகையில் பென்சில்வேனியா மாகாணத்தின் பட்லர் நகரில் இந்திய நேரப்படி நேற்று முன்தினம் அதிகாலையில் அவர் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவரை நோக்கி மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் டிரம்பின் வலது காதில் ஏற்பட்ட காயத்துடன் உயிர் தப்பினார். ஆனால் அவரது ஆதரவாளர்களில் ஒருவர் குண்டு பாய்ந்து இறந்தார். மேலும் 2 பேர் காயமடைந்தனர்.
உடனே டிரம்பை சுட்டவரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். அவர் பென்சில்வேனியாவின் பிட்ஸ்பர்க் நகரை சேர்ந்த தாமஸ் மேத்யூ என்ற 20 வயது வாலிபர் என்பது தெரியவந்தது. இந்த பயங்கர சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியிருப்பதாவது:-
டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தியது யார்? என்று எங்களுக்கு தெரியும். ஆனால் இந்த தாக்குதலுக்கான நோக்கம் குறித்து தெரியவில்லை. விசாரணை அனைத்தும் தொடக்க நிலையிலேயே இருப்பதால் இந்த துப்பாக்கிச்சூட்டின் நோக்கம் அல்லது சுட்டவரின் தொடர்புகள் குறித்து அமெரிக்கர்கள் யாரும் எந்த யூகங்களிலும் ஈடுபட வேண்டாம்.
அமெரிக்காவில் இதுபோன்ற வன்முறைக்கு இடம் இல்லை. இந்த வன்முறையை சாதாரணமானதாக கருதுவதை அனுமதிக்க முடியாது. தேர்தலில் நமது நம்பிக்கைகள் எவ்வளவு வலுவாக இருந்தாலும், வன்முறையில் ஒருபோதும் இறங்கக்கூடாது.
நாட்டில் அரசியல் வார்த்தைப்போர் பெரும் உச்சமடைந்து இருக்கிறது. அதை அமைதிப்படுத்த வேண்டிய நேரம் இது.
இவ்வாறு ஜோ பைடன் கூறியுள்ளார்.
இதற்கிடையே துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து விஸ்கான்சின் மாகாண பிரசாரம் மற்றும் குடியரசு கட்சியின் தேசிய மாநாடு போன்றவற்றை 2 நாட்கள் தள்ளி வைப்பதாக டிரம்ப் அறிவித்து உள்ளார். முன்னதாக இந்த கடினமான சூழலில் அமெரிக்கர்கள் அனைவரும் ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.