அமெரிக்காவில் தேசிய அவசரநிலை பிரகடனம் செய்ய டிரம்ப் திட்டம்
|எல்லைப் பாதுகாப்பை உறுதி செய்ய தேசிய அவசரநிலை பிரகடனம் செய்து, ஆவணமற்ற புலம்பெயர்ந்தவர்களை நாடு கடத்த திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்,
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். வரும் ஜனவரி மாதம் அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ளார். டொனால்டு டிரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தின் போது, சட்டவிரோத குடியேற்றம் குறித்து அதிகம் பேசினார். ஜோ பைடன் ஆட்சியில் சட்டவிரோதமாக அமெரிக்க எல்லைக்குள் புகுந்தவர்களை நாடு கடத்தி, மெக்ஸிகோவுடனான எல்லையை உறுதி செய்து நாட்டை பாதுகாப்பேன் என்று டொனால்டு டிரம்ப் உறுதி அளித்திருந்தார்.
இந்த நிலையில், டிரம்ப் தலைமையிலான ஆட்சியில் தேசிய அவசரநிலை கொண்டு வரப்பட்டு, ராணுவத்தை பயன்படுத்தி பெருமளவிலான புலம்பெயர்ந்தவர்களை நாடு கடத்தவுள்ளார் என்று ட்ரூத் சமூக ஊடகத்தில் ஒருவர் பதிவிட்டிருந்தார்.அந்த பதிவுக்கு பதிலளித்த டிரம்ப், உண்மைதான் என்று ஒப்புக் கொண்டுள்ளார்.
அமெரிக்காவில் சுமார் 1.1 கோடி மக்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. டிரம்பின் நாடு கடத்தல் நேரடியாக 2 கோடி குடும்பங்களை பாதிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது