'கனடா, மெக்சிகோவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி' - டிரம்ப் அறிவிப்பு
|கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.
வாஷிங்டன்,
அமெரிக்காவில் சமீபத்தில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். இதையடுத்து அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக வரும் ஜனவரி 20-ந்தேதி டிரம்ப் பதவியேற்க உள்ளார். இந்த நிலையில் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், நிர்வாக ரீதியாக மேற்கொள்ளப்பட இருக்கும் மாற்றங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து டிரம்ப் அறிவித்து வருகிறார்.
அந்த வகையில், ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
"மெக்சிகோ மற்றும் கனடா வழியாக அமெரிக்காவிற்குள் ஆயிரக்கணக்கான மக்கள் நுழைகின்றனர். இதனால் குற்றங்களும், போதைப்பொருள் பழக்கமும் இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். தற்போது திறந்த நிலையில் இருக்கும் அமெரிக்க எல்லை வழியாக மெக்சிகோவில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான மக்களை தடுத்து நிறுத்த முடியாத நிலை உள்ளது.
ஜனவரி 20 ஆம் தேதி, எனது பல்வேறு நிர்வாக உத்தரவுகளில் ஒன்றாக, மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து அமெரிக்காவின் திறந்த எல்லை வழியாக வரும் அனைத்து பொருட்களுக்கும் 25 சதவீதம் வரி விதிப்பதற்கான உத்தரவில் நான் கையெழுத்திடுவேன். அமெரிக்காவிற்குள் சட்டவிரோத குடியேற்றம் தடுத்து நிறுத்தப்படும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும்.
நீண்ட காலமாக நீடித்து வரும் இந்த பிரச்சினைக்கு மெக்சிகோ மற்றும் கனடாவால் எளிதாக தீர்வு காண முடியும். எனவே, அவர்கள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். அனால் அதுவரை மெக்சிகோவும், கனடாவும் அதற்கான விலையை கொடுத்தே ஆக வேண்டும்."
இவ்வாறு டிரம்ப் தெரிவித்துள்ளார்.