அமெரிக்கா: கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் சோகம்; 4 பேர் பலி
|அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு தயாரானபோது, விஷ வாயு தாக்குதலில் வீட்டில் இருந்த 4 பேர் பலியாகி உள்ளனர் என கூறப்படுகிறது.
நியூயார்க்,
அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷைர் மாகாணத்தில் வேக்பீல்டு நகரில் வீடு ஒன்றில் 4 பேர் பலியாகி கிடந்த அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்துள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த நியூ ஹாம்ப்ஷைர் மாகாண தீயணைப்பு துறை தலைவர் சீன் டூமீ கூறும்போது, போலீசாருக்கு இந்த சம்பவம் பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக போலீசார் வந்து பார்த்தபோது, 4 பேரும் உயிரிழந்து கிடந்தனர். அவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு வராத நிலையில், சந்தேகத்தின்பேரில் மற்ற குடும்ப உறுப்பினர்கள் போலீசாரை தொடர்பு கொண்டு இதுபற்றி விசாரிக்க கோரியுள்ளனர்.
இதில், அவர்கள் 4 பேரும் பலியாகி கிடந்தது தெரிய வந்தது. அவர்களில் 2 பேர் வயது முதிர்ந்தவர்கள் ஆவர். தற்செயலாக நடந்த சம்பவத்தில் இவர்கள் உயிரிழந்து இருக்க கூடும் என அதிகாரிகள் நம்புகின்றனர். குளிர்காலத்தில் வெப்பநிலை வெகுவாக குறைந்து உள்ளது. இதனால், வெப்பமூட்டும் சாதனங்களை அவர்கள் பயன்படுத்தியபோது, அதில் இருந்து கார்பன் மோனாக்சைடு விஷ வாயு கசிந்து அவர்கள் பலியாகி இருக்க கூடும் என்று கூறப்படுகிறது.
எனினும், உயிரிழந்தவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. அவர்களின் பிரேத பரிசோதனை முடிவிலேயே உண்மையான காரணம் என்னவென்று தெரிய வரும்.