< Back
உலக செய்திகள்
300 பில்லியன் டாலர் என்பது மிக குறைவு.. காலநிலை நிதி ஒப்பந்தத்தை நிராகரித்தது இந்தியா
உலக செய்திகள்

300 பில்லியன் டாலர் என்பது மிக குறைவு.. காலநிலை நிதி ஒப்பந்தத்தை நிராகரித்தது இந்தியா

தினத்தந்தி
|
24 Nov 2024 3:23 PM IST

இதற்கு முன்பு ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர்களை வழங்குவதாக நிர்ணயிக்கப்பட்ட இலக்கு இரண்டு ஆண்டுகள் தாமதமாக எட்டப்பட்டது.

பாகு (அசர்பைஜான்):

வளரும் நாடுகள் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை நிர்வகிப்பதற்கும், பிரச்சினைகளை சமாளிப்பதற்கும் தேவையான நிதியுதவிகள் மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வளர்ந்த நாடுகள் வழங்குகின்றன. இதற்காக ஐ.நா. காலநிலை நிதி தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிதி தொகுப்பு தொடர்பாக ஐ.நா. காலநிலை மாநாட்டில் ஒப்பந்தம் செய்யப்படுகிறது. அவ்வகையில், காலநிலை நிதியில் இருந்து ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் வழங்க கடந்த 2009-ல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், அசர்பைஜானில் நடைபெற்ற ஐ.நா. காலநிலை மாநாட்டின் நிறைவு நாளான இன்று காலநிலை நிதி தொகுப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், காலநிலை நிதி தொகுப்பை மூன்று மடங்காக உயர்த்த தீர்மானிக்கப்பட்டது. அதாவது, காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவதற்கு 2035-ம் ஆண்டு வரை ஆண்டுதோறும் குறைந்தபட்சம் 300 பில்லியன் டாலர்களை ஒதுக்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால், இந்த ஒப்பந்தத்தை இந்தியா நிராகரித்தது. மாநாட்டின் நிறைவு விழாவில் இந்தியா சார்பில் பொருளாதார விவகாரத்துறை ஆலோசகர் காந்தினி ரெய்னா பேசும்போது, காலநிலை நிதி ஒப்பந்த செயல்முறை நியாயமற்றது என்றும், இந்த நிதி மிகக் குறைவு என்றும் கூறினார்.

அவர் மேலும் பேசியதாவது:-

ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வது தொடர்பாக முடிவு எடுப்பதற்கு முன்னர் நாங்கள் அறிக்கை வெளியிட விரும்புவதாக கோரிக்கை விடுத்திருந்தோம். இருப்பினும், மேடையில் வைத்து மட்டும் எடுக்கப்பட்ட இந்த முடிவு ஏமாற்றம் அளிக்கிறது.

உங்கள் செயல்பாடுகளை நாங்கள் பார்த்தோம். உறுப்பு நாடுகளை பேச விடாமல் புறக்கணிப்பது காலநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. கட்டமைப்பு மாநாட்டின் அமைப்புக்கு (UNFCCC) பொருந்தாத செயல். நீங்கள் எங்களின் கருத்து மற்றும் ஆட்சேபனைகளை கேட்க வேண்டும் என விரும்புகிறோம். இதை நாங்கள் முற்றிலும் எதிர்க்கிறோம்.

நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே காலநிலை மாற்றத்திற்கு எதிராக அர்த்தமுள்ள நடவடிக்கைகளை செயல்படுத்த முடியும். இந்த இரண்டும் இன்று சரியாக இல்லை என்பதுதான் உண்மை. மாநாட்டு தலைவர் மற்றும் செயலகத்தின் நடவடிக்கைகள் வேதனை அளிக்கின்றன.

2035-ம் ஆண்டிற்குள் ஆண்டுதோறும் 300 பில்லியன் டாலர்கள் என்ற புதிய காலநிலை நிதி தொகுப்பு மிகக் குறைவானது மற்றும் மிகவும் தாமதமான முடிவு. எனவே, இந்த நிதி தொகுப்பின் தற்போதைய வடிவத்தில் அதனை நாங்கள் ஏற்கவில்லை.

2020-ம் ஆண்டிற்குள் ஆண்டுக்கு 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவதாக 2009-ம் ஆண்டில் அவர்கள் (வளர்ந்த நாடுகள்) உறுதியளித்தனர். இருப்பினும், இந்த இலக்கானது இரண்டு ஆண்டுகள் தாமதமாக அதாவது 2022-ம் ஆண்டில்தான் எட்டப்பட்டது. அதில் சுமார் 70 சதவீத நிதிகள் கடன்களாக வந்தன.

300 பில்லியன் டாலர்கள் என்பது வளரும் நாடுகளின் தேவைகள் மற்றும் முன்னுரிமைகளை பூர்த்தி செய்ய போதாது. வளர்ந்த நாடுகள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற விரும்பவில்லை என்பதையே இது பிரதிபலிக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்தியாவின் இந்த கருத்தை நைஜீரியா, மலாவி, பொலிவியா ஆகிய நாடுகள் ஆதரித்தன.

மேலும் செய்திகள்