தன்பாலின திருமணத்தை சட்டபூர்வமாக அங்கீகரித்தது தாய்லாந்து
|தாய்லாந்து செனட் சபையில் திருமண சமத்துவ மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது.
பாங்காக்,
தாய்லாந்தில் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க வகை செய்யும் திருமண சமத்துவ மசோதா, நாடாளுமன்றத்தில் சில மாதங்களுக்கு முன்பு நிறைவேறியது. இதனை தொடர்ந்து செனட் சபையிலும் திருமண சமத்துவ மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவிற்கு 130 பேர் ஆதரவாக வாக்களித்தனர். சிலர் வாக்களிக்காமல் வெளியேறினர். 4 பேர் எதிர்த்து வாக்களித்தனர். ஏற்கனவே, மக்கள் பிரதிநிதிகள் கொண்ட சபையில் கடந்த மார்ச் மாதம் இந்த மசோதா நிறைவேறியது. இதன்மூலம் விரைவில் தாய்லாந்தில் தன்பாலின திருமணம் சட்டப்பூர்வமாக இருக்கிறது.
இதன் மூலம் ஒரு ஆண் மற்றொரு ஆணையும், ஒரு பெண் மற்றொரு பெண்ணையும் திருமணம் செய்து கொள்ள முடியும். இந்த மசோதா செனட் கமிட்டி ஆய்வு செய்யும். பின்னர் அரசியலமைப்பு நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும். அதன்பின் மன்னரிடம் இருந்து ஒப்புதல் வழங்கப்பட்ட பின் சட்டமாக்கப்படும். இதன் மூலம் தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும் முதல் தென்கிழக்கு ஆசிய நாடாக தாய்லாந்து விளங்கும்.