மத்திய கிழக்கில் பதற்றம்... சிரியா அரசை கைப்பற்றும் கிளர்ச்சியாளர்கள்...?
|சிரியாவில் உள்ள அலெப்போ மற்றும் ஹமா பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய நிலையில், தலைநகர் டமாஸ்கஸ் நோக்கி முன்னேறி வருகின்றனர்.
டமாஸ்கஸ்,
சிரியா நாட்டில் அதிபர் பஷார் அல்-ஆசாத் தலைமையிலான அரசு நடந்து வருகிறது. எனினும், அந்நாட்டில் 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில், 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர் என ஐ.நா. அமைப்பு தெரிவிக்கின்றது. இந்த எண்ணிக்கையை விட 2 மடங்கு அதிகம் (6 லட்சம்) என சிரியாவின் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவிக்கின்றது.
சில ஆண்டுகளாக பெரிய அளவில் வன்முறை எதுவும் ஏற்படாத நிலையில், கடந்த வாரம் மீண்டும் கிளர்ச்சி வெடித்தது. ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போரில் ஈடுபட்டு வருகின்றனர். இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட நிலையில் இந்த கிளர்ச்சி வெடித்துள்ளது.
இதில், சிரியாவுக்கான அல்-கொய்தா கிளை அமைப்புடன் தொடர்பிலுள்ள ஹயத் தஹ்ரீர் அல்-ஷாம் அமைப்பின் தலைவர் அபு முகமது கூறும்போது, அதிபர் பஷார் அல்-ஆசாத்தின் ஆட்சிக்கு முடிவு ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்களுடைய இலக்கு என்றார்.
சிரியாவில் உள்ள அலெப்போ மற்றும் ஹமா பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி உள்ளனர். அவர்கள் ஹோம்ஸ் நகர் நோக்கி முன்னேறி வருகின்றனர். இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் அப்பகுதியில் இருந்து தப்பியோடி வருகின்றனர். இந்நகரை கைப்பற்றினால், கிளர்ச்சியாளர்களின் கை ஓங்கும் என கூறப்படுகிறது.
இந்த சூழலில், சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் நோக்கி கிளர்ச்சியாளர்கள் முன்னேறி வருகின்றனர் என மற்றொரு செய்தி தெரிவிக்கின்றது. இந்நகரை சுற்றிலும் குவிக்கப்பட்ட வீரர்களை அரசு வாபஸ் பெற்றுள்ளது என தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.
டமாஸ்கஸின் மோவாதமியா அல்-ஷாம் மற்றும் தரயா உள்ளிட்ட பல்வேறு புறநகர் பகுதிகளில் இருந்தும், மிஜ்ஜே ராணுவ விமான நிலையத்தில் இருந்தும் கூட அரசு படைகள் வாபஸ் பெறப்பட்டு விட்டன என கூறப்படுகிறது. ஆனால், அரசோ இதனை மறுத்துள்ளது.
இதேபோன்று, தலைநகர் டமாஸ்கஸில் இருந்து அதிபர் ஆசாத் வெளியேறி விட்டார் என ஒருபுறம் தகவல்கள் வெளிவருகின்றன. ஆனால், ஆசாத் பணியை தொடர்கிறார் என்றும் தலைநகரில் இருந்தபடி, தேசிய மற்றும் அரசியல் சாசன கடமைகளை செய்து வருகிறார் என்றும் அதிபர் வட்டாரம் தெரிவிக்கிறது.
எனினும், நகரை நாங்கள் சுற்றி வளைத்து விட்டோம் என்று கிளர்ச்சியாளர்கள் குழுவின் தளபதி ஹசன் அப்தில் கனி கூறுகிறார். ஆசாத்தின் அரசாட்சியை கைப்பற்ற தயாராக இருங்கள் என ஹயத் தஹ்ரீர் அல்-ஷாம் குழுவின் தலைவர் அகமது அல்-ஷரா, டெலிகிராமில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
ஆசாத்தின் அரசு சில நாட்களில் கிளர்ச்சியாளர்கள் வசம் செல்ல கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது. ஆனால், ரஷியா உள்ளிட்ட சில நாடுகள், பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் சிரியா செல்வது என்பது ஏற்று கொள்ள முடியாதது என கூறி வருகிறது. இதனால், மத்திய கிழக்கில் பதற்ற நிலை காணப்படுகிறது.
இந்த சூழலில், சிரியாவுக்கான பயண அறிவுறுத்தலை மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. அடுத்த அறிவிப்பு வெளிவரும் வரை மக்கள் சிரியாவுக்கான பயணங்களை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. பொதுமக்கள் முடிந்த வரை விரைவாக சிரியாவை விட்டு வெளியேறுங்கள் என தெரிவித்து உள்ளது.
இதேபோன்று அவசரகால உதவி எண்ணையும் அறிவித்து உள்ளது. +963993385973 என்ற எண்ணை தொடர்பு கொள்ளும்படியும், hoc.damascus@mea.gov.in என்ற இ-மெயில் முகவரியை தொடர்பு கொள்ளவும் என்றும் அதுபற்றிய செய்தி குறிப்பு தெரிவிக்கின்றது.