டெலிகிராம் செயலியின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ் கைது
|டெலிகிராம் செயலியின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ், பிரான்ஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாரீஸ்,
பிரபலமான செய்தி பரிமாற்ற செயலியாக டெலிகிராம் இருந்து வருகிறது. குறிப்பாக ரஷியா, உக்ரைன் மற்றும் முன்னாள் சோவியத் யூனியனின் குடியரசுகளில் டெலிகிராம் செல்வாக்கு பெற்றதாக இருக்கிறது. பேஸ்புக், யூடியூப், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், டிக்டாக் மற்றும் வீசேட் ஆகியவற்றிற்குப் பிறகு முக்கிய சமூக ஊடக தளங்களில் ஒன்றாக டெலிகிராம் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இது அடுத்த ஆண்டில் ஒரு பில்லியன் பயனர்களை உருவாக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது.
துபாயை தளமாகக் கொண்ட டெலிகிராம் ரஷியாவில் பிறந்த துரோவ் என்பவரால் நிறுவப்பட்டது. 2014-ம் ஆண்டு அவர் விற்ற தனது வீகே சமூக ஊடக தளத்தில், எதிர்க்கட்சி சமூகங்களை மூடுவதற்கான அரசாங்க கோரிக்கைகளுக்கு இணங்க மறுத்த பின்னர் அவர் ரஷியாவை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில் டெலிகிராம் செயலியின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ், பிரான்ஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரான்சில் உள்ள போர்கேட் விமான நிலையத்தில் வைத்து போலீசார் அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர். முன்னதாக பாவெல் துரோவ் தனது பிரைவேட் ஜெட்டில் அர்பைஜான் நோக்கி சென்ற நிலையில் பாரீஸ் போலீசார் கைது செய்துள்ளனர்.
தீவிரவாத இயக்கங்களுக்கு உதவி செய்தது, போதை பொருள் விநியோகம், மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், துரோவ் தனது தளத்தின் குற்றவியல் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கத் தவறியதாகவும் கூறப்படுகிறது. துரோவ் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.