சிரியாவில் பெண்களின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிட மாட்டோம்: கிளர்ச்சியாளர்கள் உறுதி
|தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் தனிநபர்களின் உரிமைகளுக்கு மரியாதை அளிப்பதே நாகரீகமான தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான அடிப்படை என கிளர்ச்சிக் குழு தெரிவித்துள்ளது.
டமாஸ்கஸ்:
சிரியாவில் பல ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டு போரில் முக்கிய திருப்பமாக கிளர்ச்சியாளர்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர். சமீபத்தில் அதிபர் பஷார் அல் ஆசாத்தின் அரசாங்கத்தை கிளர்ச்சியாளர்கள் கூட்டணி வீழ்த்தி தலைநகர் டமாஸ்கஸை கைப்பற்றியது. இதனால் நாட்டில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சிரியாவில் பெண்களின் ஆடை விஷயம் உள்ளிட்ட தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடமாட்டோம் என்று கிளர்ச்சியாளர்கள் கூறி உள்ளனர்.
இதுபற்றி கிளர்ச்சிக் குழு சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், "பெண்களின் ஆடை விஷயத்தில் தலையிடுவது அல்லது அவர்களின் அடக்கம், ஆடை கட்டுப்பாடு தொடர்பான எந்தவொரு கோரிக்கையும் தடைசெய்யப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் தனிநபர்களின் உரிமைகளுக்கு மரியாதை அளிப்பதே நாகரீகமான தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான அடிப்படை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.