ஏடன் வளைகுடாவில் சரக்கு கப்பலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
|ஏடன் வளைகுடாவில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
சனா,
காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.
இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளது. மேலும், காசா முனையின் நஸ்ரத் அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 4 பணய கைதிகளையும் சமீபத்தில் இஸ்ரேல் அதிரடியாக மீட்டது.
ஆனால், 116 பேர் இன்னும் பணய கைதிகளாக ஹமாஸ் பிடியில் உள்ளதாகவும், அதில் சிலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும், காசாவில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காசா முனையில் இஸ்ரேல் படையினரும் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும் ஆதரவு அளித்து வருகின்றனர்.
ஹமாசுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அரபிக்கடல், செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், சரக்கு கப்பல்களை சிறைபிடிக்கும் செயலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் அரபிக்கடலின் ஏடன் வளைகுடாவில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சரக்கு கப்பலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. ஏவுகணை கப்பலுக்கு மிக அருகே கடலில் விழுந்துள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் கப்பலில் இருந்த மாலுமிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
அதேபோல், இஸ்ரேலின் துறைமுக நகரமான எலியட் நகரை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல் நடத்தினர். ஆனால், இஸ்ரேல் எல்லைக்குள் வந்த டிரோனை அந்நாட்டு படையினர் நடு வானிலேயே சுட்டு வீழ்த்தினர். இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.