< Back
உலக செய்திகள்
சூடான்: ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் துணை ராணுவப்படையினர் 150 பேர் பலி
உலக செய்திகள்

சூடான்: ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் துணை ராணுவப்படையினர் 150 பேர் பலி

தினத்தந்தி
|
19 Nov 2024 4:39 AM IST

சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.

கார்டூம்,

சூடான் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் ஃபடக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின் துணைத்தலைவராக துணை ராணுவப்படையின் தளபதியான ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே, துணை ராணுவத்தின் படைப்பிரிவுகளில் ஒன்றான அதிவிரைவு ஆதரவு படையினரை ராணுவத்துடன் இணைக்க ராணுவ தளபதியான ஜெனரல் ஃபடக் அல்-பர்ஹன் முயற்சி மேற்கொண்டார். இதற்கு துணை ராணுவப்படையின் அதிவிரைவு ஆதரவு படையினர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.

இதனால், ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே கடந்த ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி முதல் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. துணை ராணுவத்தின் அதிவிரைவு ஆதரவு படையினர் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியும் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் தலைநகர் தெற்கு டார்ப் மாகாணம் அல் பஷீர் நகரில் நேற்று ராணுவத்திற்கும் துணை ராணுவத்தின் அதிவிரைவுப்படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இந்த மோதலில் துணை ராணுவத்தின் அதிவிரைவுப்படையினர் 150 பேர் உயிரிழந்தனர்.

சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் இதுவரை 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்