தென் கொரியாவில் அவசர நிலை அறிவிப்பு
|தென் கொரியாவில் அவசரகால ராணுவ சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
சியோல்,
தென் கொரியாவில் அவசரகால ராணுவ சட்டம் அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டின் அதிபர் யூன் சுக் இயோல் அதிரடியாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக தொலைக்காட்சியில் உரையாற்றிய யூன் சுக் இயோல், வட கொரிய கம்யூனிஸ்ட் படைகளின் அச்சுறுத்தல் காரணமாக தென் கொரியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தேசத்தை பாதுகாப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மேலும், "நமது நாடாளுமன்றம் குற்றவாளிகளின் புகலிடமாகவும், சர்வாதிகாரத்தின் வசிப்பிடமாகவும் மாறியுள்ளது. அவர்கள் நீதித்துறை மற்றும் நிர்வாக அமைப்புகளை முடக்கி, நமது ஆட்சியை கவிழ்க்க முயல்கின்றனர்" என்று யூன் சுக் இயோல் தெரிவித்தார்.
தென் கொரியாவில் ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே பட்ஜெட் விவகாரத்தில் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில், தென் கொரியாவில் அவசர நிலையை அமல்படுத்தும் முடிவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த முடிவால் தென் கொரியாவின் பொருளாதாரம் மீள முடியாத அளவிற்கு பின்னடைவை சந்திக்கும் என எதிர்க்கட்சி தலைவர் லீஜே மியாங் எச்சரித்துள்ளார்.