இலங்கையின் புதிய பிரதமரை நாளை அறிவிக்கிறார் அதிபர் திசநாயகா
|225 இடங்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்துக்கு கடந்த 14- தேதி தேர்தல் நடைபெற்றது.
கொழும்பு,
இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட அனுரா குமார திசநாயகா வெற்றிப்பெற்று அதிபரானார்.
அந்த சமயத்தில் இலங்கை நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கூட்டணிக்கு 3 எம்.பி.க்கள் மட்டுமே இருந்ததால் அவர் நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். இடைக்கால பிரதமராக பெண் எம்.பி. ஹரிணி அமரசூரியாவை நியமித்தார்.
இந்த நிலையில் 225 இடங்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்துக்கு கடந்த வியாழக்கிழமை தேர்தல் நடந்தது. இதில் 159 இடங்களை கைப்பற்றி தேசிய மக்கள் சக்தி கூட்டணி அமோக வெற்றிப் பெற்றது. 3-ல் இரண்டு பங்கு இடங்களை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.
இந்த நிலையில் இலங்கையின் புதிய பிரதமர் மற்றும் மந்திரி சபையை அதிபர் திசநாயகா நாளை (திங்கட்கிழமை) நியமிப்பார் என்று தேசிய மக்கள் சக்தி கூட்டணி அறிவித்துள்ளது. இதனிடையே புதிய நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் வருகிற 21-ந்தேதி தொடங்குகிறது.