< Back
உலக செய்திகள்
முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வர இலங்கை அதிபர் திசநாயகே   திட்டம்
உலக செய்திகள்

முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வர இலங்கை அதிபர் திசநாயகே திட்டம்

தினத்தந்தி
|
4 Oct 2024 12:50 PM IST

இலங்கை அதிபர் திசநாயகே தனது முதல் வெளிநாட்டு பயணமாக விரைவில் இந்தியா வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொழும்பு,

இலங்கையில் கடந்த மாதம் 21 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அனுரகுமரா திசநாயகே வெற்றி பெற்றார். இலங்கை அதிபராக பொறுப்பேற்ற பிறகு தனது முதல் வெளிநாடு பயணமாக திசநாயகே எங்கு செல்வார் என்பது இலங்கையில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

ஏனெனில், இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுடன் இலங்கை நெருக்கம் காட்டி வருகிறது. அதிலும் தற்போது அதிபராக பொறுப்பேற்றுள்ள திசநாயகே சீன ஆதரவு நிலைப்பாடு கொண்டவர் என தேர்தல் பிரசார சமயத்தில் பேச்சுக்கள் எழுந்தன. இலங்கையில் இதற்கு முந்தைய அதிபர்கள் தங்கள் முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கே வருகை தந்துள்ள நிலையில், புதிய அதிபரும் இதே வழக்கத்தை பின்பற்றுவாரா என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு வருகை தர திசநாயகே திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் விடுத்த அழைப்பை இலங்கை அதிபர் ஏற்றுக்கொண்டதாகவும் இதனால், தனது முதல் வெளிநாட்டு பயணமாக திசநாயகே இந்தியாவுக்கு வருகை தர அதிக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்