ஸ்பெயின் கனமழை, வெள்ளம்: மீட்புப்பணிக்கு கூடுதலாக வீரர்கள் அனுப்பி வைப்பு
|ஸ்பெயினில் வெள்ள பாதிப்பை எதிர்கொள்ள மீட்புப்பணிக்காக போலீசார், ராணுவ வீரர்கள் என மொத்தம் 10 ஆயிரம் பேர் கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மாட்ரிட்,
ஸ்பெயின் நாட்டின் வெலன்சியா மாகாணத்தில் கடந்த புதன்கிழமை திடீரென கனமழை பெய்தது. ஓராண்டு பெய்ய வேண்டிய மழை சில மணிநேரங்களில் கொட்டித்தீர்த்தது. அந்நாட்டின் கஸ்டிலா லா மஞ்சா, அண்டலுசியா ஆகிய நகரங்களிலும் கனமழை பெய்தது.
கனமழை காரணமாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளம் நகரின் பல்வேறு பகுதிகளை சூழ்ந்தது. வெள்ள நீருடன் சேறும் வீடுகளை சூழ்ந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் அவதியடைந்தனர். மேலும், சாலை போக்குவரத்து, ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனிடையே, கனமழை, வெள்ளத்தால் ஸ்பெயினில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 205 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெலன்சியாவில் மட்டும் 202 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழை , வெள்ளம் தொடர்பான மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கனமழை, வெள்ள பாதிப்பை எதிர்கொள்ள மீட்புப்பணிக்காக போலீசார், ராணுவ வீரர்கள் என மொத்தம் 10 ஆயிரம் பேர் கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே மீட்புப்பணியில் வீரர்கள் ஈடுபட்டுத்தப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக 5 ஆயிரம் ராணுவ வீரர்களும், 5 ஆயிரம் போலீசாரும் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.