தென்கொரியா: பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபரை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு
|தென்கொரியாவில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபரை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சியோல்,
தென்கொரிய அதிபராக செயல்பட்டு வந்தவர் யூன் சுக் இயோல். இவர் கடந்த 3ம் தேதி நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இந்த அறிவிப்பிற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவசர நிலை உத்தரவை அதிபர் திரும்பப்பெற்றார்.
இதனை தொடர்ந்து அதிபர் சுக் இயோலை பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தன. வாக்கெடுப்பின் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதிபர் பதவியில் இருந்து யூன் சுக் இயோல் நீக்கப்பட்டார். இதையடுத்து பிரதமராக செயல்பட்டு வந்த ஹாங் டக் சோ அந்நாட்டின் இடைக்கால அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, துணை பிரதமராக செயல்பட்டு வந்த சோய் சங் மோக் நாட்டின் இடைக்கால அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, நாட்டில் அவரச நிலையை பிரகடனப்படுத்தி கிளர்ச்சிக்கு நிகரான குற்ற செயலில் யூன் சுக் இயோக் ஈடுபட்டாரா? என்பது குறித்து மத்திய ஊழல் தடுப்பு பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்து வருகிறது. இது தொடர்பான வழக்கும் சியோலில் உள்ள மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்தி நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியதற்காக பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபர் யூன் சுக் இயோலை கைது செய்ய கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவர் கைது செய்யப்படுவாரா? என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.