தென் ஆப்பிரிக்கா: இந்திய வம்சாவளி நபரை கடத்தி பணம் பறிக்க முயன்ற மனைவி கைது
|இந்திய வம்சாவளி தொழிலதிபரை கடத்தி பணம் பறிக்க முயன்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜோகனஸ்பர்க்,
தென் ஆப்பிரிக்காவில் உள்ள பிரிடோரியா பகுதியில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, இந்திய வம்சாவளி தொழிலதிபர் அஷ்ரப் காதரையும், அவரது மனைவி பாத்திமா இஸ்மாயிலையும் மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர். இதையடுத்து, அடுத்த நாளே போலீசார் அஷ்ரப் காதரை கடத்தல் கும்பலிடம் இருந்து பத்திரமாக மீட்டனர்.
தொடர்ந்து போலீசார் தனிப்படை அமைத்து கடத்தல்காரர்கள் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது கடத்தலில் ஈடுபட்டவர்கள் மாம்லோடி என்ற பகுதியில் பதுங்கி இருப்பதும், அந்த பகுதியில் உள்ள நபர்களிடம் அஷ்ரப் காதரின் மனைவி பாத்திமா இஸ்மாயில் தொடர்பில் இருந்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், தொழிலதிபர் அஷ்ரப் காதரை கடத்தி பணம் பறிப்பதற்காக அவரது மனைவியே இந்த கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் கடத்தல்காரர்கள் 4 பேரை கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட பாத்திமா இஸ்மாயிலையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.