< Back
உலக செய்திகள்
அமெரிக்கா தேர்தல் களத்தில் பரபரப்பு: கமலா ஹாரிஸ் தேர்தல் அலுவலகத்தில் துப்பாக்கி சூடு

கோப்புப்படம் 

உலக செய்திகள்

அமெரிக்கா தேர்தல் களத்தில் பரபரப்பு: கமலா ஹாரிஸ் தேர்தல் அலுவலகத்தில் துப்பாக்கி சூடு

தினத்தந்தி
|
26 Sept 2024 2:27 AM IST

அரிசோனாவில் உள்ள கமலா ஹாரிசின் தேர்தல் பிரசார அலுவலகத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதியும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றனர். இதனால் தற்போது அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கருத்துக்கணிப்புகளில் கமலா ஹாரிசுக்கு ஆதரவு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேர்தலுக்காக கமலா ஹாரிஸ் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்காக ஜனநாயக கட்சி சார்பில் நாட்டின் பல பகுதிகளிலும் தேர்தல் அலுவலகங்கள் திறக்கப்பட்டு உள்ளன.

அந்தவகையில் அரிசோனா மாகாணத்தின் பீனிக்ஸ் நகரில் தேர்தல் அலுவலகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் நேற்று துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. மர்ம நபர் நடத்திய இந்த துப்பாக்கி சூட்டில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. எனினும் பொருட்கள் சேதமடைந்ததாக தெரிகிறது. இந்த அலுவலகம் குறிவைக்கப்படுவது ஒரு மாதத்தில் இது இரண்டாவது முறையாகும். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கி சூடு நடத்தியவர் இதுவரை கைது செய்யப்படவில்லை. அவரை போலீசார் வலைவீசி தேடி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்