< Back
உலக செய்திகள்
முதியோர் இல்லத்தில் புகுந்து துப்பாக்கி சூடு; 6 பேர் பலியான சோகம்
உலக செய்திகள்

முதியோர் இல்லத்தில் புகுந்து துப்பாக்கி சூடு; 6 பேர் பலியான சோகம்

தினத்தந்தி
|
23 July 2024 7:06 AM IST

குரோஷியாவில் முதியோர் இல்லத்தில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடந்த பகுதிக்கு துணை பிரதமர் தவோர், சுகாதார மந்திரி பெரோஸ் உள்ளிட்டோரை செல்லும்படி பிரதமர் கேட்டு கொண்டார்.

ஜாக்ரப்,

குரோஷியா நாட்டின் தாருவார் நகரில் முதியோர்களுக்கான தனியார் இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மர்ம நபர் ஒருவர் திடீரென உள்ளே புகுந்து துப்பாக்கி சூடு நடத்தினார். இதில், சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

இதுபற்றி குரோஷிய காவல் தலைவர் நிகோலா மிலினா கூறும்போது, இந்த சம்பவத்தில், இல்லத்தில் தங்கியிருந்த 5 பேர் உயிரிழந்தனர். ஊழியர் ஒருவரும் பலியாகி உள்ளார். மொத்தம் 6 பேர் பலியானார்கள். 6 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர், கடந்த காலத்திலும் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டிருக்கிறார். ராணுவ போலீசின் படை பிரிவில் ஒருவராக இருந்துள்ளதுடன், பதிவு செய்யப்படாத சிறிய துப்பாக்கியையும் வைத்திருக்கிறார். இந்த தாக்குதல் பற்றி விசாரணைக்கு பின்னரே எதுவும் கூற முடியும் என கூறியுள்ளார்.

இந்த நிலையில், துப்பாக்கி சூடு நடத்தியதும் தப்பியோடிய நபர், பின்னர் உணவு விடுதி ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு அந்நாட்டு பிரதமர் ஆண்டிரெஜ் பிளென்கோவிக் இரங்கல் தெரிவித்து கொண்டதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து வருவார்கள் என நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

துப்பாக்கி சூடு தாக்குதல் நடந்த பகுதிக்கு துணை பிரதமர் தவோர் பொஜினோவிக், சுகாதார மந்திரி விலி பெரோஸ் உள்ளிட்டோர் செல்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்