< Back
உலக செய்திகள்
சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை
உலக செய்திகள்

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை

தினத்தந்தி
|
8 Jan 2025 5:49 PM IST

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரியாத்,

பாலைவன நாடு என்று அழைக்கப்படும் சவுதி அரேபியாவில் ஆண்டுக்கு மிக குறைவான அளவே மழை பதிவாகும். சராசரியாக ஆண்டுக்கு 10 சென்டி மீட்டர் மழை பெய்வதே பெரிய விஷயம் ஆகும். தற்போது பருவநிலை மாற்றம் காரணமாக சவுதி அரேபியாவில் அவ்வப்போது கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இரண்டு நாட்களில் சவுதியில் 4.9 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. அதேபோல் ஜெட்டா நகரில் 3.8 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் வெளுத்து வாங்கிய கனமழையால் சாலைகள் அனைத்தும் ஆறுகள் போல் காட்சி அளித்தன. குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் புகுந்து மக்கள் பெரும் அவதிக்கு ஆளாயினர். வெள்ளத்தில் சிக்கி ஏராளமான வாகனங்கள் நாசமாயின. இந்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக ஓமனில் 21 பேரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் 4 பேரும் உயிரிழந்தனர்.

இந்நிலையில் தற்போது சவுதி அரேபியாவில் மீண்டும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சவுதி தேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி,

இந்த வாரம் முழுவதும் மிதமானது முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். கிழக்கு மாகாணத்தில் சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை மற்றும் தூசி நிறைந்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அவற்றில் கிழக்கு நகரங்களான அல் அஹ்ஸா, ஜுபைல், அல் கோபார், தம்மாம் மற்றும் கதீப் ஆகியவை அடங்கும். மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக சவுதி அரேபியாவில் பொது இடங்களுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணம் மற்றும் ரியாத்தில் உள்ள பள்ளிகளும் ஆன்லைன் வகுப்புகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கனமழையால் துபாய் விமான நிலையமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சவுதி அரேபியாவில் கொட்டித் தீர்க்கும் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி சவுதி அரேபியாவில் உள்ள அனைத்து சாலைகளும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் ஏராளமான கார்கள், பஸ்கள் உள்ளிட்டவை வெள்ளத்தில் சிக்கி மூழ்கியுள்ளன. புனித நகரமான மெக்கா மற்றும் ஜெட்டா நகரங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மழையோடு அவ்வப்போது பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழையும் பெய்து வருகிறது. சவுதி அரேபியா முழுவதும் பல பகுதிகளில் வரலாறு காணாத அளவில் மழை பெய்து வருவதாக உள்ளூர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்