பிரதமர் மோடிக்கு ரஷியாவின் உயரிய விருது; அதிபர் புதின் கவுரவம்
|இந்தியா மற்றும் ரஷியா ஆகிய இருதரப்பு நாடுகளின் உறவுகளில் பிரதமர் மோடி ஆற்றிய சிறந்த பணிகளுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
மாஸ்கோ,
இந்தியா மற்றும் ரஷியா இடையேயான வருடாந்திர 22-வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அந்நாட்டுக்கு நேற்று விமானத்தில் புறப்பட்டு சென்றார். அவர், மாஸ்கோ நகரில் விமான நிலையத்திற்கு சென்றிறங்கியதும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவரை ரஷியாவின் முதல் துணை பிரதமர் டெனிஸ் மாந்துரோவ் வரவேற்றார். தொடர்ந்து, ரஷிய படையினரின் சிறப்பு அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்று கொண்டார். இதன்பின், மாஸ்கோவில் உள்ள கார்ல்டன் ஓட்டலுக்கு பிரதமர் மோடி காரில் சென்றார். பிரதமர் மோடியை வரவேற்ற ரஷிய அதிபர் புதின் விருந்து அளித்தார்.
இதன்பின் இரு நாட்டு தலைவர்களும் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் எரிபொருள், வணிகம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இணைந்து பணியாற்றுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருநாட்டு உறவுகள் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்நிலையில், ரஷியாவின் உயரிய சிவிலியன் விருது என அழைக்கப்படும் ஆர்டர் ஆப் செயிண்ட் ஆன்ட்ரூ தி அப்போஸ்தலர் விருது பிரதமர் மோடிக்கு இன்று வழங்கப்பட்டது.
இதனை பிரதமர் மோடியின் கழுத்தில் அணிவித்து, ரஷிய அதிபர் புதின் கவுரவப்படுத்தினார். இந்தியா மற்றும் ரஷியா ஆகிய இருதரப்பு நாடுகளின் உறவுகளில் பிரதமர் மோடி ஆற்றிய சிறந்த பணிகளுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
இதனை கடந்த 2019-ம் ஆண்டு புதின் அறிவித்து இருந்த நிலையில், இன்று இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது. இதன்பின் மேடையில் பேசிய பிரதமர் மோடி, ரஷிய மக்களுக்கு தன்னுடைய நன்றிகளை தெரிவித்து கொண்டார்.